சென்னையில் 55 மின்சார ரயில்கள் ரத்து... மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு.. ஆகஸ்ட் 18 வரை ஓடாது!

Aadmika
Aug 12, 2024,06:40 PM IST

சென்னை :   தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தேதி ஆகஸ்ட் 14 ல் இருந்து ஆகஸ்ட் 18 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சென்னை கடற்கரை- தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 வரை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. ரத்து செய்யப்பட்டதற்கு மாறாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.




இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு, கடற்கரை - செங்கல்பட்டு-கடற்கரை இடையேயான புறநகர் ரயில்களின் சேவை ஆகஸ்ட் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 14 வரை இருந்த ரயில்கள் ரத்து, தற்போது ஆகஸ்ட் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


திருநெல்வேலி - செங்கோட்டை இடையேயான ரயில்வே பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை ரயில்கள் அனைத்தும் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை- செங்கோட்டை ரயில் சேவை தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்