சென்னை மக்களே.. நாளையும் 44 புறநகர் ரயில் சேவை ரத்து.. ஸ்பெஷல் மெட்ரோ, பஸ்களுக்கு ஏற்பாடு!

Meenakshi
Mar 02, 2024,09:28 PM IST

சென்னை: பராமரிப்பு பணிக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை (மார்ச்-3) 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் நிறுவனமும், மாநகர போக்குவரத்துக் கழகம் சிறப்பு மெட்ரோ மற்றும் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளன.


சென்னை மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் சென்று வர முக்கிய பங்கு வகிப்பது ரயில் சேவை தான். ரயில் சேவை இல்லை என்றால் சென்னை வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுவிடும் அந்த அளவிற்கு ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையல்ல என்றே சொல்லலாம். கடந்த சில வாரங்களாக வார இறுதியில்  மின்சார ரயில்கள் பாராமரிப்பு பணி காரணமாக சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. 




அதன்படி நாளையும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 44 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (மார்ச் - 3) ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையிலிருந்து காலை 10:30 மணி முதல் மதியம் 2:30 மணிவரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் தாம்பரத்திலிருந்து காலை 10:05 மணி முதல் மாலை 4:30 மணி வரை சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. 


சென்னை கடற்கரையில் இருந்து காலை 11:00 மணி முதல் மதியம் 2:15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.  அதேபோல் செங்கல்பட்டில் இருந்து காலை 9:40 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. 

சென்னை கடற்கரையிலிருந்து மதியம் 1:00 புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சிபுரத்திலிருந்து காலை 9:30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இதையடுத்து மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல மாநகரப் போக்குவரத்துக் கழகமும், தாம்பரத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.