மதுரைக்காக டெல்லியில் கை கோர்த்த 5 எம்.பிக்கள்.. அதிரடி கோரிக்கைகள்.. அமைச்சர் சொன்ன பதில் என்ன?
டெல்லி: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தென் மாவட்ட எம்.பிக்கள் டெல்லியில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவைச் சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
தென் மாவட்ட மக்களிடையே நீண்ட காலமாக பல கோரிக்கைகள் உள்ளன. இந்தக் கோரிக்கைகளில் பல இது போதிய கவனம் செலுத்தப்படவே இல்லை. பிற மாவட்ட குறிப்பாக மேற்கு மாவட்ட, வட மாவட்டங்களில் பல்வேறு தொழில் வளர்ச்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது போல தென் மாவட்டங்களில் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் நீண்ட காலமாகவே உள்ளது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 5 எம்பிக்கள் (மொத்தம் 9 எம்.பிக்கள் உள்ளனர்) இணைந்து இன்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரைச் சந்தித்து சில கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடசன் போட்டுள்ள எக்ஸ் பதிவு:
மதுரை விமானநிலைய கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களோடு தென்மாவட்ட எம்.பிக்கள் சந்தித்தனர். மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் இராம் மோகன் நாயுடு அவர்களை தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், கார்த்திக் சிதம்பரம், நவாஸ்கனி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சந்தித்தோம் .
மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக தரம் உயர்த்த வேண்டும், மதுரையிலிருந்து சிங்கபூருக்கு இயக்கப்படும் விமானத்தின் நாட்களை குறைக்க கூடாது. மதுரையிலிருந்து கோலாலம்பூருக்கு விமானம் இயக்கப்பட வேண்டும். மதுரையிலிருந்து டில்லிக்கு ஏர் இந்தியா விமானங்களை இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
மதுரை விமான நிலைய ஊழியர் எண்ணிக்கை, உள்துறை அமைச்சகத்தால் இரண்டு ஷிப்ட் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கும், 3 ஷிப்ட் சர்வதேச விமான போக்குவரத்துக்குமாக தீர்மானிக்கப்பட்ட அளவான 305 ஐ விட மிகக் குறைவாக 214 ஆக உள்ளது. இதனால் 24 மணி நேர சர்வதேச விமான சேவையை தருவதில் மிகப்பெரும் தடங்கல்கள் உள்ளன.
இதற்கிடையில் புதிய மனித வளத் தேவை குறித்த ஆய்வு நடத்தப்பட்டு 3 ஷிப்ட் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கும், 3 ஷிப்ட் சர்வதேச விமான போக்குவரத்துக்குமாக 481 ஊழியர் எண்ணிக்கையை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு அதற்கு ஏற்ப ஊழியர் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.
மதுரை ஓர் முக்கியமான நகரம். அதன் விமான நிலைய மேம்பாடு என்பது ஒட்டுமொத்த தென் தமிழகத்தின் மேம்பாட்டிற்கு பயன்படக்கூடியதாகும். ஆகவே உடனடியாக புதிய மனிதவள ஆய்வின் அடிப்படையில் ஊழியர் எண்ணிக்கையை நிர்ணயித்து பணி அமர்த்தவும் வேண்டுமெனவும் கோரிக்கைவைத்தோம். இக்கோரிக்கைகள் மீது உரிய பரிசீலனை செய்து நல்ல முடிவெடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்
மதுரை தொடர்பான கோரிக்கைகளுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்த 5 எம்.பிக்கள் மத்திய அமைச்சரை இணைந்து சந்தித்தது தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோரிக்கைகளுக்காக இப்படி கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் இணைந்து மத்திய அமைச்சர்களை சந்திப்பது தொடர வேண்டும். தொடர்ந்து சந்தித்து அழுத்தம் தர வேண்டும். ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை .. தூத்துக்குடி முதல் திண்டுக்கல் வரை தென் மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இப்படி ஒட்டுமொத்தமாக எம்.பிக்கள் இணைந்து குரல் கொடுக்கும்போது அது வலுப்பெறும். கவனிக்கப்படும்.
அதேபோல மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இந்த பகுதி எம்எல்ஏக்கள் அணி திரள வேண்டும். முதல்வரைச் சந்தித்து ஒரே குரலில் கோரிக்கை வைக்க வேண்டும். தென் மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். இதை அவர்கள் தொடர்ந்து செய்தால் மக்களின் அபிமானத்தையும் தக்க வைக்க முடியும்.