அந்தமானில் தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை.. 3 நாட்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்தது!

Su.tha Arivalagan
May 19, 2024,12:39 PM IST

டெல்லி:  அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் குமரிக் கடலின் சில பகுதிகளில்  தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


வழக்கமாக மே 21ம் தேதி இங்கு தென் மேற்குப் பருவ மழை தொடங்கும். ஆனால் தற்போது 3 நாட்களுக்கு முன்பாகவே மழை தொடங்கி விட்டது. இந்த மழையானது படிப்படியாக கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா என்று பரவி நாடு முழுவதும் பரவலாக பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மே 31ம் தேதி வாக்கில் கேரளாவில் பருவ மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதே அங்கு நல்ல மழை பெய்து வருகிறது.




மாலத்தீவு, குமரிக் கடல் பகுதிகள், நிக்கோபார் தீவுகள், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கமான மழையை விட கூடுதலான மழைப்பொழிவு இந்த சீசனில் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 


கோடை மழை குறைவுதான்




என்னதான் சமீப நாட்களாக நல்ல மழை பெய்து வந்தாலும் கூட கோடை மழை இந்த முறை 17 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்த ஆண்டு மார்ச் 1 முதல் இன்று வரை மொத்தம் 84.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் அது 101.4 மில்லி மீட்டராக இருக்க வேண்டும். அந்த வகையில் 17 சதவீதம் அளவுக்கு குறைவான மழையே இந்த கோடையில் நமக்குக் கிடைத்துள்ளது.