வடிவேலு பாணியில் சும்மா இருந்தால் பரிசு.. ஆத்தாடி எங்க தெரியுமா.. நம்ம தென் கொரியாவுலதான்!

Meenakshi
May 18, 2024,03:18 PM IST

சியோல்: வடிவேலு ஒரு படத்தில் செய்த காமெடியை தென் கொரியாவில் சீரியஸாகவே கடைப்பிடித்து போட்டி நடத்தி பரிசும் தர்றாங்க..அது என்னா தெரியுமா..  சும்மாவே இருப்பதற்கான போட்டிதான்.. இதற்குத்தான் பரிசு கொடுத்து அசத்தியுள்ளது தென்கொரிய அரசு.


சும்மாவே ஒரு மனிதர் இருக்கிறார் என்றால் அவரை பார்த்து நாம் எல்லாம் சிரிப்போம். மொதல்ல சும்மா இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழும். இதை வச்சுத்தான் நம்ம வைகைப் புயல் வடிவேலு ஒரு படத்தில் காமெடி செய்திருப்பார். வடிவேலு ஒரு படத்தில் எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருப்பார். அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர், சும்மா இருக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா என்று கேட்க அவரை வம்பிக்கிழுத்து போட்டி வைத்து சும்மா இருக்கச் சொல்வார் வடிவேலு.. அந்த ஆள் அய்யோ என்னால முடியல என்று கதற, இப்ப தெரியுதா சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு என்று கூறி அவரை சவுக்கால் அடிப்பார்.. !




அந்த சும்மா இருப்பதை வைத்து தான் தென்கொரிய அரசு ஒரு போட்டி நடத்தியுள்ளது. ஆம் மக்களே...எதுவும் செய்யாமல், வெட்டியாக, சும்மாவே இருப்பதற்காக ஒரு போட்டி வைத்துள்ளது இந்த அரசு. இன்றைய காலகட்டத்தில் நம்மில் பெரும்பான்மையோர் கையில் செல்போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதை வைத்து தான் இந்த போட்டி நடந்தப்பட்டுள்ளது. 


தூங்காமல், குறிப்பாக செல்போன் பயன்படுத்தாமல், யாரிடமும் பேசாமல் இருக்க வேண்டும். அதுவும், 90 நிமிடங்களுக்கு, அதாவது 1.30 மணி நேரம் அமைதியாக இருக்க வேண்டும். அதுவும் கண்களை விழித்தவாறு வேறு இருக்க வேண்டுமாம். இந்த போட்டியில், பங்கேற்கும் போட்டியாளர்களின் இதயத்துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படுமாம். எதற்கு தெரியுமா? அப்ப தான் யார் டென்சன் ஆகிறார்கள் என்பது தெரியுமாம். 


இந்த போட்டியில் ஒலிம்பிக் வீரர், பிரபல யூ டியூபர் உள்பட 117 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் இறுதியில்  போட்டியாளர்களாக 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த 10 பேரில்  மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சும்மாவே இருந்து வெற்றி பெற்றவருக்கு பரிசும் கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.


ஆக, வடிவேலு காமெடியா பண்றதெல்லாம் உலகத்துல ஏதாவது ஒரு மூலைல சீரியஸா பண்ணிட்டிருக்காங்க போல.. ஹய்யோ ஹய்யோ!