இந்தியாவில் உள்ள தங்கத்தில்.. 40% தென்னிந்தியப் பெண்களிடம் இருக்காம்.. தமிழ்நாடுதான் அதிலும் டாப்!
டெல்லி: உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் அதிக அளவிலான தங்கம் புழக்கத்தில் உள்ளதாம். அதிலும் தென்னிந்தியப் பெண்களிடம் மட்டும் 40 சதவீத அளவுக்கு தங்கம் உள்ளதாக புள்ளிவிவரத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்களைப் பொறுத்தவரை தங்கத்துக்கு இங்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதை வெறும் உலோகமாக பார்க்காமல், பொக்கிஷமாக, சொத்தாக, அதிர்ஷ்டமாக, கலாச்சார அடையாளமாக பார்க்கிறார்கள் இந்தியர்கள். குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு தங்கம் வெறும் ஆபரணம் மட்டுமல்ல, நல்ல முதலீடும் கூட.
கையில் நாலு காசு சேர்ந்தால் உடனே தங்கம் வாங்கத்தான் பெண்கள் விரும்புவார்கள், முன்னுரிமை கொடுப்பார்கள். காரணம் அது நாளைக்கு உதவும் என்பதால். அது ஒரு நல்ல முதலீடாகவும் இந்தியக் குடும்பங்களில் உள்ளது.
இந்தியப் பெண்களுக்கும், தங்கத்துக்கும் இடையிலான பந்தம் பிரிக்க முடியாதது, ஆழமானது, மிகவும் நெருக்கமானது. காதில் போடும் தோடு முதல் கழுத்தை அலங்கரிக்கும் தாலி வரை தங்கம் இல்லாத பெண்களைப் பார்க்க முடியாது. கல்யாணங்கள், வீட்டு விசேஷங்களில் தங்கத்தின் முக்கியத்துவம் அதீதமாக இருக்கும்.
இப்படிப்பட்ட தங்கம் இந்தியாவில் எந்த அளவுக்கு இருக்கிறது தெரியமா.. வாங்க ஒரு டேட்டாவைப் பார்ப்போம்.
உலக அளவில் மொத்தம் உள்ள தங்கத்தில் 11 சதவீத அளவிலான தங்கம் இந்தியாவில் உள்ளதாம். அதாவது 24,000 டன் தங்கம் இந்தியாவில் உள்ளதாம். உலக தங்க கவுன்சில் இந்தத் தகவலைக் கூறியுள்ளது. அமெரிக்காவில் 8000 டன், ஜெர்மனியில் 3000 டன் தங்கம் உள்ளதாம். இத்தாலியில் 2450, பிரான்சில் 2400, ரஷ்யாவில் 1900 டன் தங்கம் புழக்கத்தில் உள்ளதாம்.
இந்த நாடுகளின் மொத்த தங்கத்தையும் சேர்த்தால் கூட அது இந்தியப் பெண்களிடம் உள்ள தங்கத்துக்கு சமமாகாது என்பது சுவாரஸ்யமானது. இந்தியப் பெண்களிடம் உள்ள தங்கத்தின் அளவை ஒப்பிட்டால் அது சர்வதேச நிதியம் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டு பணத்தை விட அதிகமாகவே இருக்குமாம்.
தென்னிந்தியப் பெண்களின் கெத்து
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்தியப் பெண்கள் என்று எடுத்துக் கொண்டால், தென்னிந்தியப் பெண்களிடம்தான் அதிக அளவிலான தங்கம் உள்ளதாம். அதாவது இந்தியாவில் உள்ள மொத்த தங்கத்தில் தெனனிந்தியப் பெண்களிடம் மட்டும் 40 சதவீதம் அளவுக்கு நகைககள் உள்ளதாம். இதில் தமிழ்நாடுதான் டாப்பில் இருக்கிறது. அதாவது இந்த 40 சதவீதத்தில், தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 28 சதவீதமாகும்.
இந்திாயவில் அதிக அளவிலான தங்கம் இருப்பதால் நாட்டின் பொருளாதாரமும் உயர உதவுகிறதாம். இந்தியாவின் ஜிடிபியில் 40 சதவீதம் இந்த தங்கத்தின் மதிப்பு பங்களிக்கிறது.
மேலும் இந்திய வருமான வரிச் சட்டமும் கூட தங்கத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் உள்ளது. இதனாலும் கூட மக்களிடையே தங்க நகை சேமிப்பு அதிகம் காணப்படுகிறது. வருமான வரிச் சட்டப்படி ஒரு திருமணமான பெண் 500 கிராம் தங்க நகை வரை வைத்துக் கொள்ளலாம். திருமணமாகாத பெண் என்றால் 250 கிராம் வரை வைத்திருக்க முடியும். ஆண்கள்தான் பாவம் பாஸ்.. வெறும் 100 கிராம் தங்கம் மட்டும்தான் வச்சுக்கலாம்.
இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை தங்கம் என்பது கலாச்சார அடையாளம் மட்டுமல்லாம்ல பொருளாதார பாதுகாப்பும் கூட என்று உலக தங்க கவுன்சில் வர்ணித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்