எதிர்க்கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம்.. ஆகஸ்ட் 25ல் மும்பையில்!
Jul 28, 2023,09:33 AM IST
டெல்லி : பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணியான இ.ந்.தி.யா வின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் மாதம் 25 ம் தேதி மும்பையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024 லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசை கவிழ்ப்பதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இ.ந்.தி.யா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நடந்த நிலையில், 2வது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
இந்நிலையில் 3வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடக்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆனால் எந்த தேதியில் நடக்கிறது என சொல்லவில்லை.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மும்பையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மல்லிகார்ஜூன கார்கே ஏற்கனவே அறிவித்தபடி லோக்சபா தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கான 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது. தங்களின் ஆலோசனை கூட்டம் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
3வது ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி., பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு, இரண்டாண்டு சிறை தண்டனை பெற்றிருப்பதால் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாது. பிரியங்கா காந்தியை கூட்டணி கட்சிகள் ஏற்பார்கள் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது.
சோனியா குடும்பத்தை சேர்ந்த யாரும் பிரதமர் வேட்பாளர் ரேசில் இல்லை என்றால் மற்ற கட்சிகளுக்கு அந்த வாய்ப்ப செல்லலாம். அந்த வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. அவர் மூத்த தலைவர், பட்டியலினத்தைச் சேர்ந்தவர், எல்லோரின் அன்பையும் பெற்றவர், நிதாநமானவர், அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர். முக்கியமாக இந்தி நன்றாக பேசக் கூடியவர் என்பதால் இந்தி பெல்ட்டுகளிலும் அவரை வைத்து ஈஸியாக பிரச்சாரம் செய்ய முடியும்.