வெளுக்கும் ஊமை வெயில்.. புழுக்கம் தாங்க முடியலையே சாமி!

Su.tha Arivalagan
May 12, 2023,03:49 PM IST
சென்னை: தமிழ்நாடு முழுக்க வெயில் படிப்படியாக அதிகரிக்கும் போலத் தெரிகிறது. இதையே தமிழ்நாடு வெதர்மேன் போட்டுள்ள பதிவும் வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திர காலம் நடந்து வருகிறது. வழக்கமாக இதுபோன்ற சமயத்தில் வெயில் வெளுத்துக் கட்டும்.  ஆனால் வங்கக் கடலில் ஏற்பட்ட மாற்றம்,  தொடர்ந்து உருவான மோச்சா புயல் உள்ளிட்ட காரணங்களால் தற்போது வெயில் சற்று குறைந்து காணப்பட்டது. சில நாட்களாக பெரியஅளவில் வெயில் இல்லை.

ஆனால் வெயில் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட புழுக்கம் அதிகமாக இருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதைத்தான் ஊமை வெயில் என்று சொல்வார்கள். பார்க்க வெயில் போலவே தெரியாது, ஆனால் உள்ளுக்குள் எரியும், உடம்பெல்லாம் சுடும், புழுக்கம் அதிகமாக இருக்கும்.அந்த நிலைதான்ந் தற்போது நிலவுகிறது.



சென்னையைப் பொறுத்தவரை ஊமை வெயில் வாட்டிக் கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், வடக்கு தமிழ்நாட்டில் ஊமை வெயில் தொடர்கிறது. மீனம்பாக்கத்தில் இன்று 39 டிகிரி செல்சியல் வெயில் வெளுத்தது. இந்த மாதத்தின் முதல் அனல் நாளாக இது இருந்தது. நாளை இன்னும் வெயில் அதிகமாக இருக்கும். கண்டிப்பாக 41 டிகிரி வரை போகலாம்.

கேரளா, கன்னியாகுமரி, மதுரை, பிற தென் தமிழ்நாட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. காற்றும் பலமாக இருக்கக் கூடும். மறுபக்கம் மோச்சா புயல் வலுவடைந்து விட்டது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஓரளவுக்கு கோடை மழை பெய்துள்ளதால் வெட்கை பெரிதாக தணிந்துள்ளது. ஆனாலும் ஊமை வெயில் அடிப்பதால் புழுக்கத்திற்குக் குறைவில்லை.