நாளை சூரசம்ஹாரம்.. திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

Aadmika
Nov 17, 2023,06:49 PM IST

திருச்செந்தூர்: சிவபெருமானுக்கு அஷ்ட விரதங்கள் எனப்படும் எட்டு வகையான விரதங்கள் எடுக்கப்படும். அதேபோல் அவரது மகன் ஆறுமுகப் பெருமானுக்கு மூன்று வகையான விரதங்கள் கடைபிடிக்கப்படுகிறது.


அவை கிழமை விரதம் எனப்படும் செவ்வாய்க்கிழமை விரதம், திதிகளில் சஷ்டி திதியில் இருக்கப்படும் விருதம், திதி விரதம் எனப்படும் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது மாத விரதம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மூன்று விரதங்களும் முருகப்பெருமானுக்கு மிகவும் முக்கியமானதாகும்.


இருந்தாலும் அதிகமான பக்தர்களால் இருக்கப்படும் விரதம் சஷ்டி விரதம். இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் சஷ்டியிலும் தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். மாதத்திற்கு இரண்டு முறை சஷ்டி திதியில் வருகிறது என்றாலும் கூட, ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி விரதம்தான் அதிக அளவிலான பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிற சஷ்டியில் தான் முருகப்பெருமான் சூரனை வதம் செய்து தேவர்களை காத்தார்.




அதனால் இந்த நாளில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் அம்மாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி சஷ்டி திதி வரையிலான ஆறு நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். தினமும் காலையும் மாலையும் குளித்து முடித்து முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முருக தரிசனம் செய்து வழிபடுவார்கள். நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ் போன்ற முருகப்பெருமானுக்குரிய பாடல்களை பாடி பக்தர்கள் முருகப்பெருமான் நினைவில் ஆழ்ந்திருப்பார்கள்.


பொதுவாக குழந்தை குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள் என சொல்லப்படுவதுண்டு. ஆனால் குழந்தை வரும் மட்டும் இன்றி திருமணம், வேலை போன்ற எந்த பிரச்சினையாக இருந்தாலும் கந்தவேலின் அடி பணிந்தால், வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வேண்டினால் வேண்டிய வரங்கள் அனைத்தையும் முருகப்பெருமான் அருள்வார்.


ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி விரதம், கந்த சஷ்டி விழா என கொண்டாடப்படுகிறது. இது உலகம் முழுவதிலும் உள்ளம் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான முருக பக்தர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழா நடைபெறும் என்றாலும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த தளமான அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார விழா உலகப் புகழ் பெற்றதாகும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி நிற்பார்கள்.


நாளை மாலை உற்சவமூர்த்தியான ஜெயந்திநாதர், கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரைக்கு சென்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இதனை காண்பதற்காக லட்சக்கணக்கான முருக பக்தர்கள் இன்றே திருச்செந்தூரில் கூடியிருக்கிறார்கள். இதனால் திருச்செந்தூர் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்  பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான இன்று சிக்கலில், சிங்காரவேலர் வேல் வாங்கும் வைபவம் நடைபெறும். அதாவது சிக்கலில் வேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, திருத்தணி மலை வந்தமர்ந்து தனது கோபத்தை முருகப்பெருமான் தணித்துக் கொண்டார் என்பது ஐதீகம். எனவேதான், முருகனின் அனைத்துத் தலங்களிலும் சூரசம்ஹாரம் நடந்தாலும் கூட திருத்தணியில் மட்டும் நடைபெறாது. 


சிக்கலில் வேல் வாங்கும் வைபவத்தின் போது முருகப்பெருமானின் திருமேனியில் வியர்த்து கொட்டும் அதிசயம் இன்றளவும்  நடந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்றால், தனது தாயான ஆதி பராசக்தியிடம் வேல் வாங்கும்போது பயத்துடன்தான் முருகன் வேலைப் பெற்றார் என்பதாக ஐதீகம். இதனால்தான் முருகனுக்கு வியர்த்துக் கொட்டியதாம். அதுதான் இன்றளவும் அங்கு நடந்து வருகிறது. 


சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு கடலில் குளித்துவிட்டு வரும் பக்தர்கள் தங்களின் விரதத்தை நிறைவு செய்வார்கள். இதற்கு அடுத்த நாளான ஏழாம் நாளில் முருகப்பெருமானுக்கு வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். அத்தோடு சஷ்டி விழா நிறைவு பெறும்.