சிக்கலில் வேல் வாங்கி.. திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த முருகன்.. பக்தர்கள் பரவசம்!
Nov 18, 2023,05:47 PM IST
திருச்செந்தூ்: கந்த சஷ்டி விழாவின் உச்சகட்ட நிகழ்வான சூரசம்கார விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சூர சம்ஹாரத்தைப் பார்த்து பக்திப் பரவசம் அடைந்தனர்.
இந்த அசுரர்களை அழித்து தேவர்களைக் காப்பாற்றவும், இந்திரனைக் காத்து, இந்திராணியசின் மாங்கல்யத்தைக் காக்கவே, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்பது புராணமாகும்.
முருகப்பெருமானுக்குரிய முக்கியமான விரதம் சஷ்டி விரதம் ஆகும். ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி திரியை கந்த சஷ்டி விழாவாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நவம்பர் 13ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. உலகில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோடிக்கணக்கான முருக பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். முருகன் கோவில்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும் தங்கி இருந்து பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். ஐந்து நாள் கந்த சஷ்டி விழாவில் ஐந்து நாட்கள் விரதம் இருந்து ஆறாவது நாளான இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.
முருகப்பெருமானின் அவதார நோக்கமே சூரனை வதம் செய்வதாகும். சிக்கலில் அன்னை பராசக்தியிடம் இருந்து சக்திவேல் வாங்கிய முருகப்பெருமான் திருச்செந்தூர் தளத்தில்தான் சூரணையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து வெற்றி கொண்டு தேவர்களை காத்தருளினார்.
தலையா கடலலையா
இந்தப் புராண நிகழ்வை நினைவு கூறும் விதமாக முருகப்பெருமானின் வேற்றுமையை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இன்று சூரசம்கார விழா அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்செந்தூரில் சூர சம்ஹார விழாவிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். இதைக் காணும் போது திருச்செந்தூரில் காணப்படுவது பக்தர்களின் தலைகளா அல்லது கடல் அலையா என்று சந்தேகிக்கும் அளவுக்கு கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டமாக இருந்தது.
கடல் அலைகளை மிஞ்சும் அளவிற்கு பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. பிற மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். திருச்செந்தூர் முழுவதும் முருகனுக்கு அரோகரா என்று கோஷம் விண்ணை பிளந்தது.
மாலை நாலு 15 மணியளவில் உற்சவமூர்த்தியான ஜெயந்திநாதர் சக்திவேல் உடன் திருச்செந்தூர் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரைக்கு வந்து சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இது பல தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. அதனால் நேரில் மட்டும் இன்றி உலகம் முழுவதிலும் தொலைக்காட்சி வழியாகவும் கோடிக்கணக்கான முருக பக்தர்கள் இந்த நிகழ்வை கண்டு ரசித்தனர்.
சூரசம்ஹாரம் ஏன்?
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய தீக்கதிர்கள் ஆறு தாமரை மலர்களில் விழுந்து அது குழந்தைகளாக மாறியது. இந்த ஆறு குழந்தைகளையும் வளர்த்தெடுக்கும் பொறுப்பு கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆறு உருவங்களையும் பராசக்தி ஒன்று ஆக்கி ஆறுமுகனை நமக்கு அளித்தார். ஆறுமுகப்பெருமான் பராசக்தி இடம் வேல் வாங்கி சூரனுடன் போரிட்டு வெற்றி கண்டு தேவர்களை காத்தருளினார்.
கஜமுகாசுரன், சூரபத்மன், சிங்கமுகாசுரன் ஆகிய மூன்று அரக்கர்களும் தேவர்களுக்கு பல விதங்களில் துன்பங்களை ஏற்படுத்தி வந்தனர். இந்த அசுரர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்பதால் அவர்களை யாராலும் அழிக்க முடியவில்லை. அதற்கு காரணம் சூரபத்மன் வாங்கி இருந்த வரம்தான். பிரம்மாவிடம் அவன் வாங்கிய வரத்தின் படி தாயின் கருவில் இருந்து பிறக்காத ஒருவனால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என பிரம்மாவிடம் இருந்து வரம் பெற்று இருந்தான். இந்த வரத்தின் காரணமாகவே அவன் தேவ பதவியை அடைவதற்காக தேவர்களுக்கு பல விதங்களில் துன்பங்கள் கொடுத்து வந்தான்.
சூர சம்ஹாரத்தின்போது, முதலில் தாராகசுரனையும், பின்னர் கஜமுகாசுரனையும், பிறகு சிங்கமுகாசுரனையும், கடைசியாக சூரபத்மனையும் அழிப்பார் முருகப் பெருமான். இனி தப்ப வழியே இல்லை என்பதை உணரும் சூரபத்மன், கடைசியாக முருகனிடமிருந்து தப்புவதற்காக மரமாக மாறி நிற்பான். ஆனால் சூரனை தனது வேலால் இரண்டாக பிளந்து ஒரு பகுதியை சேவலாகவும் மறு பகுதியை கொடியாகவும் மாற்றிக் கொள்வார் முருகப்பெருமான்.