எர்ரான் நாயுடு மகன், தேவெ கெளடா மகன், ராம் விலாஸ் பாஸ்வான் மகன்.. அமைச்சர்களாகும் விஐபி வாரிசுகள்!
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், ராஷ்டிரிய லோக் தளம், அப்னா தளம், லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது. இந்தக் கட்சிகள் சார்பில் அமைச்சராகப் போகிறவர்கள் குறித்த அலசல்கள் விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் மத்தியில் ஒரு கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கவுள்ளது. இதில் கூட்டணிக் கட்சிகளுக்கும், அவரவர் எம்.பிக்கள் பலத்துக்கேற்ப அமைச்சரவையில் இடம் தருகிறது பாஜக.
இன்று நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கவுள்ள போது அவருடன் 30 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது. இதில் இடம் பெறும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் யார் யார் என்ற கிசுகிசுக்கள் சூடாக வலம் வருகின்றன. அதுகுறித்துப் பார்க்கலாம்.
எர்ரான் நாயுடு மகன் ராம் மோகன் நாயுடு
தெலுங்கு தேசம் கட்சியிலிருந்தும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலிருந்தும் தலா 2 பேர் இன்று பதவியேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து ராம் மோகன் நாயுடு மற்றும் சந்திரசேகர் பெம்மசானி ஆகியோர் அமைச்சர்களாகவுள்ளனராம். இதில் ராம் மோகன் நாயுடு, ஸ்ரீகாகுளம் தொகுதியிலிருந்து வென்றுள்ளார். 3 முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆவார். 36 வயதான நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியில் முக்கியப் புள்ளி. எம்பிஏ படித்தவர். கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக இருக்கிறார். தெலுங்குதேசம் கட்சியில் மிக முக்கியப் புள்ளியாக வலம் வந்த எர்ரான் நாயுடுவின் மகன்தான் ராம் மோகன் நாயுடு. எர்ரான் நாயுடு, வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டூர் எம்.பியாக வெற்றி பெற்றுள்ள சந்திரசேகர் பெம்மசானிக்கு 48 வயதாகிறது. இவர் ஒரு டாக்டர் ஆவார். மிகப் பெரிய கோடீஸ்வரர். இவரது சொத்து மதிப்பு 5785 கோடி ஆகும்.
எச்.டி. தேவகெளடா மகன் எச்.டி. குமாரசாமி
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம்க ட்சியிந் மாநிலத் தலைவருமான எச்.டி. குமாரசாமியும் மத்திய அமைச்சராகிறார். முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் இளைய மகன் இவர். 2006ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரானார் குமாரசாமி. அப்போது பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைத்தார். பின்னர் 2018ல் மீண்டும் முதல்வரானார். இப்போது காங்கிரஸுடன் கூட்டணி அரசை நடத்தினார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற ஜனதாதளம் போட்டியிட்டது. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் உள்ளிட்டவற்றால் எதிர்பார்த்த அளவுக்கு மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு வெற்றி கிடைக்காமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
கற்பூரி தாக்கூர் மகன் ராமநாத் தாக்கூர்
ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலிருந்து அமைச்சர்களாகவிருப்போர் - ராம்நாத் தாக்கூர் மற்றும் லல்லன் சிங். மறைந்த முன்னாள் பீகார் முதல்வர் கற்பூரி தாக்கூரின் மகன்தான் ராம்நாத் தாக்கூர். தேர்தலுக்கு முன்புதான் கற்பூரி தாக்கூருக்கு பாரதரத்னா விருது அளிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இவர் தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். பீகாரில் லாலு பிரசாத் யாதவ் அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்துள்ளார்.
லல்லன் சிங் 4 முறை எம்.பி ஆவார். இவரது நிஜமான பெயர் ராஜீவ் ரஞ்சன் சிங். ஆனால் எல்லோரும் லல்லன் சிங் என்றுதான் சொல்வார்கள். பீகாரில் அமைச்சராக இருந்தவர். ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசியத் தலைவராகவும் இருந்துள்ளார். நிதீஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவர். கற்பூரி தாக்கூரின் சிஷ்யர்களில் ஒருவர். லோக்சபா தேர்தலில் இவர் முங்கர் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
ராம் விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான்
மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானை மக்கள் மறந்திருக்க முடியாது. இந்தியாவில் ஒரு காலத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.பியாக சாதனை படைத்த தலித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான். இவரது மகன்தான் சிராக் பாஸ்வான். லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக இருக்கும் சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சராகவுள்ளார். இவரது கட்சிக்கு 5 எம்.பிக்கள் கிடைத்துள்ளனர்.
ஆரம்பத்தில் நடிகராக இருந்தவர் சிராக் பாஸ்வான். தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்த சிராக் பாஸ்வான், 2020ல் கட்சித் தலைவராக உருவெடுத்தார்.
சரண் சிங்கின் பேரன் ஜெயந்த் செளத்ரி
ராஷ்டிரிய லோக்தளம் கட்சி சார்பில் ஜெயந்த் செளத்ரி அமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். இவர் உ.பி மாநிலம் மதுரா தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் மறைந்த செளத்ரி சரண் சிங்கின் பேரனும், அஜீத் சிங்கின் மகனும் ஆவார். அமெரிக்காவில் பிறந்த ஜெயந்த் செளத்ரி, தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். தந்தை அஜீத் சிங் மறைவுக்குப் பிறகு ராஷ்டிரிய லோக்தளம் கட்சிக்குத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
அனுப்பிரியா படேல்
அப்னா தளம் (சோனிலால் படேல்) கட்சியின் தலைவரான அனுப்பிரியா படேல், ஏற்கனவே பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 2 முறை அமைச்சராக இருந்தவர். முதலில் 2016 முதல் 2019 வரையிலும், பின்னர் 2019 முதல் 2021 வரையிலும் அமைச்சராக இருந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மிர்ஸாபூர் எம்.பியாக இருந்து வருகிறார். தற்போது மீண்டும் மத்திய அமைச்சராகிறார்.
இவரது தந்தை சோனிலால் படேல் உருவாக்கிய கட்சிதான் அப்னாதளம். சோனிலால் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி கிருஷ்ணா சிங் தலைமையில் இது செயல்பட்டு வருகிறது. அதேசமயம், தாய் மற்றும் தங்கை பல்லவி படேல் ஆகியோருடன் முரண்பட்ட அனுப்பிரியா படேல் கட்சியை உடைத்து தனியாக அப்னாதளம் சோனிலால் படேல் பிரிவை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.