ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.. பாடலை எழுதிய இயக்குநர் ரவிசங்கர்.. தூக்கிட்டு தற்கொலை.. ஏன்?

Manjula Devi
Jul 13, 2024,03:50 PM IST

சென்னை: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடலை எழுதி பிரபலமான பாடலாசிரியரும் இயக்குநருமான ரவி சங்கர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய இறப்பு செய்தி திரை உலகினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.


பாடலாசிரியர் ரவிசங்கர் ஆரம்பத்தில் இயக்குநர் கே. பாக்கியராஜ் நடத்தி வந்த பாக்கியா வார இதழில் சிறுகதை ஆசிரியராக பணிபுரிந்தார். இவரின் படைப்புகள் கவிதை நடையில் பிரமாதமாக இருந்ததன் காரணமாக நடிகர் பாக்கியராஜ்  இவரை உதவியாளராக சேர்த்துக் கொண்டார். இதையடுத்து பாக்யராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படம் மற்றும்  விக்ரமன் இயக்கிய சூரியவம்சம் படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

 



சூரியவம்சம் படத்தில் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்தார். அதில் இடம்பெற்று பட்டி தொட்டியெங்கும் இன்று வரை பிரபலமாக உள்ள ரோஜா பூ சின்ன ரோஜா பூ என்ற பாடலை எழுதியவர் ரவிசங்கர்தான். இப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, சினிமாவில் இவருக்கென்று தனி அந்தஸ்தை உருவாக்கித் தந்தது.  இப்பாடல் பழைய காதலை நினைவுபடுத்தும் பாடலாகவும் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 


பிறகு இயக்குனராக மாறிய ரவிசங்கர் மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வருஷம் எல்லாம் வசந்தம் என்ற படத்தை இயக்கி அப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் எழுதி அசத்தினார். இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதிலும் குறிப்பாக எங்கே அந்த வெண்ணிலா.. என்ற பாடல் மனதை வருடக்கூடிய பாடலாகவும், அனைவர் மனதையும் ஈர்த்தது.  


சென்னை கே.கே நகரில் வசித்து வந்த ரவிசங்கர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. நண்பர்களின் நட்பையும் குறைத்துக் கொண்டு தனிமையிலேயே வசித்து வந்துள்ளார். பட வாய்ப்புகளும் இல்லாமல் போய் விட்டது. அமைதியான முறையில் வாழ்ந்து வந்த ரவிசங்கர், தான் தங்கி இருந்த அறையிலேயே நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 63 ஆகிறது. இந்த வயதில், ஏன் தற்கொலை செய்ததார் என்று தெரியவில்லை.


 இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் ரவிசங்கர் தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், தனிமையில் இருந்ததால் மன அழுத்தத்தால் தற்கொலை செய்திருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.