என்ன மாமியாரே இப்படிப் பண்ணிட்டீங்க.. பொசுக்குன்னு கோச்சுக்கிட்டு பாதியிலேயே கிளம்பிப் போன மருமகன்!
வெனிஸ்: ஐரோப்பாவின் அழகிய நகரான வெனிஸ் நகரத்திற்கு மனைவி, குழந்தை, மாமியார் என குடும்பத்தோடு டூர் போயிருக்கிறார் ஒருவர். போன இடத்தில் இவரது டூத் பேஸ்ட்டை எடுத்து மாமியார் பயன்படுத்தி விட்டாராம். இதனால் கோபப்பட்ட இந்த நபர் டூரிலிருந்து பாதியிலேயே கிளம்பி இவர் மட்டும் ஊர் திரும்பி விட்டாராம். இதை தனது ரெடிட் பக்கத்தில் போட்டு பலரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒரு பெரிய மனுஷன் செய்ற வேலையா இது.. இத்தணூண்டு டூத் பேஸ்ட்டை எடுத்துட்டாங்க.. அதுவும் உன் மாமியார்தானே எடுத்தாங்க.. அதுக்குப் போயி எல்லோரையும் பாதியிலேயே விட்டுட்டா வருவே என்று கேட்டு பலரும் இவரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம்மில் பலரிடமும் இதுபோன்ற பழக்கம் இருக்கும். அவர்களது பொருட்களை வேறு யார் எடுத்தாலும் அவர்களுக்குப் பிடிக்காது. எடுத்தால் கெட்ட கோபம் வரும். இந்த நபருக்கும் அப்படித்தான் போல. ஆனால் கோபம் வந்த சூழல்தான் தற்போது இவர் பலரிடம் பேச்சு வாங்க வைத்துள்ளது.
தனது பெயரைக் குறிப்பிடாமல் இவர் தனது அனுபவத்தைப் போட்டுள்ளார். அவரது பதிவின் சாராம்சம். நீங்களும் படிச்சுட்டு ஒரு தீர்ப்பை சொல்லுங்க பார்ப்போம்.
நான் எனது மனைவி, குழந்தைகள், மாமியாருடன் வெனிஸுக்கு சுற்றுலா போயிருந்தேன். முதலில் நானும் எனது மனைவியும் மட்டுமே போவதாக திட்டமிட்டிருந்தோம். எங்களது 5 வயது மகளை மாமியாரிடம் விட்டு விட்டுப் போகலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் என் மாமியோரோ, அதெல்லாம் முடியாது, நானும் வருவேன்.. என்னையும் கூட்டிட்டுப் போங்க என்று கூறி விட்டார். அது எனக்குப் பிடிக்கவில்லை. நாம மட்டும் ஜாலியாப் போகலாம்னு பார்த்தா, உன் அம்மாவும் ஏன் கொடுக்கு மாதிரி கூடவே வர்றாங்க என்று மனைவியிடம் எரிச்சல் காட்டினேன்.
அவரோ, அவரும் வரட்டும்.. வந்தா குழந்தையைப் பாத்துக்குவாங்க.. நாம ஜாலியா சுத்திப் பார்க்கலாமே.. குழந்தையும் நம்ம கூடவே இருக்குமே என்று கூறியதால், வேறு வழியில்லாமல் மொத்தமாக கிளம்பிப் போக முடிவு செய்தோம். ரூம் புக் பண்ணுவது, டூருக்கான டிக்கெட் என எல்லாவற்றையும் எனது மனைவியே செய்தார்.
இங்குதான் அவர் குழப்பி விட்டார். அதாவது 2 ரூம் போடுவதற்குப் பதில் ஒரே ரூமாக போட்டு விட்டார். மொத்தமாக ஒரே ரூமில் இருந்தால்தான் குழந்தையைப் பார்த்துக்க முடியும் என்று அவர் கருதி அப்படி போட்டு விட்டார். இது எனக்கு முதல் அதிர்ச்சி. அடுத்த அதிர்ச்சி என்னோட மாமியார்!
வீட்டிலிருந்து கிளம்பியது முதல் டூர் முழுக்க அவர் அனத்தி எடுத்து விட்டார். எனது மனைவியின் சோப்பு, டவல், ஷாம்பூ உள்பட எல்லாவற்றையும் அவரும் எடுத்துப் பயன்படுத்தினார். அதை விட கொடுமையாக எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தனிமையே இல்லாத அளவுக்கு நந்தி மாதிரி கூடவே ஒட்டிக் கொண்டு இருந்தார்.
அதை விட கொடுமையாக நானும் எனது மனைவியும் படுக்கும் படுக்கையில், நாங்கள் வெளியே சுற்றிப் பார்க்கப் போன சமயத்தில் எனது மாமியார் படுத்துத் தூங்கியுள்ளார். எனக்கு அதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. நான் ரொம்ப சுத்தம் பார்ப்பேன். அவரது இந்த செயல் எனக்கு கடுப்பைக் கொடுத்தது. மேலும் என்னிடம் கேட்காமலேயே எனது சூட்கேஸைத் திறப்பார்.. அதில் உள்ள ஹேர்டை என எது இருந்தாலும் நோண்டி எடுத்து அதைப் பயன்படுத்துவார். சூட்கேஸையே உருட்டி எடுத்து விடுவார். பெர்மிஷன் கூட கேட்க மாட்டார். அவர் இஷ்டம்தான்.
இந்த நிலையில்தான் எனது கோபத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு செயலில் அவர் ஈடுபட்டார். நானும் எனது மனைவியும் மட்டும் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த டூத்பேஸ்ட்டை எடுத்து சில நாட்களாக பல் தேய்த்து வந்துள்ளார். இது எனக்கு செம ஆத்திரத்தைக் கொடுத்து விட்டது. எங்க பொருட்களை யூஸ் பண்ணாதீங்க என்று அவரிடம் பலமுறை சொல்லியும் கேட்காமல் அவர் செய்து வந்ததால் எனக்கு கோபம் அதிகரித்தது. மறுபக்கம் என்னைப் பற்றி எனது மனைவியிடம் அவர் தப்புத் தப்பாக சொல்லி அவருக்கும் எனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவும் செய்தார்.
பொறுத்தது போதும் என்று எனது டிக்கெட்டை முன்கூட்டியே மாற்றிக் கொண்டு நான் மட்டும் கிளம்பி எனது வீட்டுக்கு வந்து விட்டேன். எனது மனைவி பலமுறை போன் செய்தும் நான் போனை எடுக்கவில்லை. அவர் பலமுறை போன் செய்து அழுதார். எனது குழந்தை ரொம்பப் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். ஆனால் எனக்கு அதையெல்லாம் கேட்க பிடிக்கவில்லை. ஆனால் எங்க சண்டைக்குள் எனது குழந்தை மாட்டிக் கொண்டது எனக்கு பெரும் வருத்தத்தைக் கொடுத்தது. ஆனால் அப்படி வருத்தப்படும்போதெல்லாம் எனது மாமியார் முகம் நினைவுக்கு வந்து எனது கோபத்தை மேலும் அதிகரிக்கவே செய்தது. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கில்லையா.
எனது மனைவியிடம் கையில் காசு இருக்கிறது. எனவே அங்கு தங்குவதில் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. எப்போது திரும்புவார்கள் என்று தெரியவில்லை. அது பற்றி நான் கேட்கவும் இல்லை என்று கூறியுள்ளார் இந்த பிரகஸ்பதி.
இருந்தாலும் நீங்க இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருக்கக் கூடாது மிஸ்டர் கடலைமுத்து!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்