அமைச்சரவை பதவியேற்பின்போது.. நீங்க அதைப் பார்த்தீங்களா.. பரபரப்பைக் கிளப்பிய வீடியோ!

Su.tha Arivalagan
Jun 10, 2024,05:31 PM IST

டெல்லி: டெல்லியில் நேற்று நடந்த பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பின்போது , ஒரு விலங்கின் நடமாட்டம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அது பூனையா அல்லது சிறுத்தையா என்று விவாதங்கள் கிளம்பியுள்ளன.


பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதற்கான விழா ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 8000க்கும் மேற்பட்டோர் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் பிரதமர் உள்பட 72 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.




அமைச்சராக துர்காதாஸ் உய்க்கே பதவியேற்றபோது நடந்த சம்பவம் இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது அமைச்சராக துர்காதாஸ் உய்க்கேவுக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்த பிறகு அவர் லெட்ஜரில் போய் கையெழுத்திட்டார். அதன் பிறகு அவர் எழுந்து குடியரசுத் தலைவரை நோக்கி சென்றபோது கேமரா அவர் பக்கம் திரும்பியபோது, அவருக்குப் பின்னால் குடியரசுத் தலைவர் மாளிகை வராந்தாவில் ஒரு விலங்கு நடமாடுவது பதிவாகியுள்ளது.


இதுதான் பலரையும் பல விதமாக கற்பனை செய்ய வைத்துள்ளது. இந்த விலங்கைப் பார்த்தால் பெரிய சைஸ் பூனை போலத்தான் தெரிகிறது. ஆனால் சிலர் இது சிறுத்தையாக இருக்கலாம் என்று சந்தேகம் கிளப்பியுள்ளனர். இந்த வீடியோவை இந்தியா டுடே செய்தியாளர் ஸ்நேகா  மொர்தானி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது வினோதமான விலங்காக இருக்கிறது.  உங்களுக்கு வித்தியாசமாக ஏதாவது தெரிகிறது.. சிறுத்தை என்று சந்தேகிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் ஆவார்.


ஆனால் அத்தனை பேர் பாதுகாப்புப்  பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் சிறுத்தை வந்திருந்தால் அதை யாருமே பார்க்காமல் இருந்திருப்பார்களா.. இது சாதாரண பூனையாகத்தான் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று பலர் சொல்கிறார்கள். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வரவில்லை. ஆனால் இருளின் பின்னணியில் நடமாடிய அந்த விலங்கின் உருவம் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.