தென்னிந்தியர்கள் தேவையில்லை.. நொய்டா நிறுவனத்தின் அறிவிப்பால்.. கொந்தளிக்கும் சோசியல் மீடியா!

Su.tha Arivalagan
Dec 18, 2024,06:59 PM IST

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தின் வேலைக்கு தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று வெளியிட்ட அறிவிப்பால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தை தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர்.


தென்னிந்தியர்கள் கால் படாத இடமே இந்தியாவில் இல்லை.. ஏன் உலகத்திலேயே இல்லை. குறிப்பாக அமெரிக்காவில் சாப்ட்வேர் துறையை ஆண்டு வருவதே தென்னிந்தியர்கள்தான். அரபு நாடுகளுக்குப் போனாலும் அங்கும் தென்னிந்தியர்கள்தான் அதிகம். சாதாரண வேலையாக இருந்தாலும் சரி சாப்ட்வேர் சாம்ராஜ்ஜியமாக இருந்தாலும் சரி, தென்னிந்தியர்களைத் தவிர்த்து எந்த வேலையையும் பார்க்க முடியாது. 


அந்த அளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கும் தென்னிந்தியர்களைப் பார்த்து, இந்த வேலைக்கு நீங்க அப்ளை பண்ணாதீங்க.. உங்களுக்குத் தகுதி இல்லை என்று ஒருவர் கூறினால் எப்படி இருக்கும்.. அப்படித்தான் நொய்டாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம்  கூறி இப்போது தென்னிந்தியர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது. மேலும் இன ரீதியாக யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பது என்பது சட்டவிரோதமான செயல் என்றும் இந்தி நிறுவனம் மீது அரசு  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.




நொய்டாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் மெளனீ கன்சல்டிங் சர்வீஸஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் டேட்டா அனாலிஸ்ட் வேலைக்கு ஆள் தேவை என்ற அறிவிப்பை தனது லிங்ட்ன் இன் தளத்தில் வெளியிட்டிருந்தது. அதில்  வேலைக்குத் தேவையான படிப்புத் தகுதி, அனுபவம் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டிலிருந்தவர்கள் கடைசியாக குறிப்பு: தென்னிந்தியர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி இல்லாதவர்கள் என்ற குறிப்பிட்டிருந்தனர். இது பெரும் கொந்தளிப்பை ஏற்புத்தியுள்ளது.


சாப்ட்வேர் துறையில் உலக அளவில் கோலோச்சி வருபவர்கள் தென்னிந்தியர்கள்தான். அப்படி இருக்கும்போது அது தொடர்பான வேலைக்கு விண்ணப்பிக்க அவர்களுக்குத் தகுதி இல்லை என்ற இந்த குறிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் இதை கடுமையாக கண்டித்து கருத்திட்டு வருகிறார்கள். இவர்கள் என்ன சாப்ட்வேர் வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா அல்லது பனீர் பட்டர் மசாலா தயாரிக்கும் வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 


நன்கு இந்தி தெரிந்தவர்கள் தேவை என்று இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளதை சிலர் சுட்டிக் காட்டி நிறுவனத்தின் அறிவிப்பை நியாயப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் பலர் பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் கூட இந்தி நன்கு தெரிந்த பலர் உள்ளனர். அப்படி இருக்கும்போது இந்தியைக் காரணம் காட்டி, தென்னிந்தியர்களுக்குத் தகுதி இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வர முடியும் என்று விளாசியுள்ளனர்.


எப்படிப் பார்த்தாலும் இந்த குறிப்பானது சட்டவிரோதமானது, நியாயமற்றது, பாரபட்சமானது, இன ரீதியாக குறைத்து மதிப்பிடும் செயல் என்று பலரும் கண்டித்துள்ளனர். தற்போது இந்த அறிவிப்பை அந்த நிறுவனம் தனது லிங்க்ட் இன் தளத்திலிருந்து நீக்கியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்