ஆத்தாடி.. கோவை வெள்ளலூரில்..  ஷூவுக்குள் விசிட் அடித்த பாம்பு.. 3 அடி நீளம்!

Su.tha Arivalagan
Nov 09, 2023,04:56 PM IST

- மஞ்சுளா தேவி


கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் ஷூக்குள் பதுங்கி இருந்த மூன்று அடி நீளமுள்ள பாம்பை பாம்பு பிடி வீரர்கள் பத்திரமாக அகற்றினர்.


வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாம்பு உள்ளிட்டவை படையெடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து விடுகின்றன. இப்படித்தான் கோவையில் ஒரு வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டது.. எங்கு தெரியுமா.. வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஷூவுக்குள்.


வெள்ளலூர் பகுதியில் ஒரு வீட்டிற்கு வெளியே உள்ள ஷூவுக்குள் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரர் மோகன் துரிதமாக செயல்பட்டு பாம்பை பத்திரமாக பிடித்து பாட்டிலு்குள்  அடைத்து அப்புறப்படுத்தினார். இந்தப் பாம்பு மூன்று அடி நீளம் கொண்டது. மழைக்காலங்களில் இது போன்று ஷுவுக்குள் பாம்புகள் அதிகமாக பதுங்க வாய்ப்பு உள்ளது. அதனால் மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என பாம்பு பிடி வீரர் மோகன் அறிவுறுத்தினார்.




பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப பாம்பு என்றாலே மனிதர்கள் பயப்படுவது இயல்பு தானே. அட சூப்பர் ஸ்டார் ரஜினியே பாம்புன்னா பயந்து நடுங்கும்போது நாமெல்லாம் எங்கங்க..! விளையாட்டாக பாம்புனு சொன்னாலே போதும்.."எங்க ..எங்க"னு அலர்ற  கூட்டம் நிறையவே இருக்குங்க. பாம்பை பார்த்த உடனையே நமக்கு என்ன செய்வதென்று தெரியாது பயத்தால் உடலில் ஒரு சில உடலியல் மாற்றங்கள் நிகழும்.


ஆனால் பாம்பு மாதிரி ஒரு உயிரினத்தைப் பார்க்கவே முடியாது. அது தேவையில்லாமல் யாரையும் கொத்தாது.. நம்மளோட செயல்பாடுகளை வைத்துத்தான் அது ரியாக்ட் செய்யுமே தவிர, அதுவாக வந்து எதையும் செய்யாது.


பாம்புகள் ஊர்வனை இனத்தைச் சார்ந்த உயிரினம். முதுகெலும்புள்ள நீளமான உடலையும் சிறு தலையையும் கொண்டது. இதன் உடல் வழவழப்பான செதில்களை கொண்டிருக்கும். பாம்புக்கு கால் கிடையாது. அது தன் உடலால் நிலத்தை உந்தி ஊர்ந்து செல்லும். சராசரியாக 3600 வகையான பாம்பு இனங்கள் உள்ளது. 


எல்லா பாம்புகளும் விஷம் உடையவை அல்ல.  சுமார் 600 பாம்புகள் மட்டும் விஷமுள்ளவை . இந்தியாவில் வாழும் நல்ல பாம்பு, ராஜநாகம் ,கட்டுவிரியான் ,போன்ற பாம்பு இனங்களே விஷத்தன்மை கொண்டவை. பொதுவாக பாம்புகள் மனிதனை நெருங்காது. அது விலகிச் செல்லவே நினைக்கும். ஒரு பாம்பு மனிதன் இருக்கும் இடத்திற்கு வந்தால் அதற்குத் தேவையான உணவு அங்கு உள்ளது என்று அர்த்தம். 


வயல்களில் பாம்பு அதிகமாக இருக்கும் ஏனெனில் வயல்களில் உள்ள எலியை சாப்பிடவே பாம்புகள் ஆங்காங்கே சுற்றி தெரியும். அதேபோல தவளைகள் அதிகம் இருக்கும் இடங்களிலும் பாம்புகள் இருக்கும். மனிதர்களாகிய நாம் அது வாழும் வயல்வெளிகளையும் ,திறந்த சுற்றுச்சூழையும் அழித்துவிட்டோம். பாம்புகள் அதனாலையே உணவைத் தேடி வீடு வரைக்கும் வருகின்றன. அதன் உணர்வை நாம் புரிந்து கொள்வதில்லை .


பாம்பை பார்த்தவுடன் அதனை எப்படியாவது அடித்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றனர். அப்போதுதான், அது தன்னைக் காத்துக் கொள்ள நம்மை தீண்டுகிறது. இதனால் பல விளைவுகள் ஏற்படுகிறது

பாவம் அது என்ன செய்யும் அது வாழும் இடங்களில் நாம் வீடு கட்டி வாழ்கிறோம். மனிதனாகிய நாம் பாம்பின் தன்மையையும், அதன் செயல் திறனையும் தெரிந்து கொண்டால் அதனிடமிருந்து விலகிச் செல்லலாம்.


எனவே பாம்பைக் கண்டதும் பயப்படாதீங்க. அடிக்கவும் செய்யாதீங்க.. பாதுகாப்பான முறையில் அதை அகற்ற நடவடிக்கை எடுங்கள்.. அது தேவையில்லாமல் நம்மைத் தீண்டாது.. எனவே பயம் வேண்டாம்.