முஸ்லீம் மாணவனை அடிக்கச் சொன்ன டீச்சர்.. அதுக்கு அவங்க சொன்ன காரணத்தைப் பாருங்களேன்!

Su.tha Arivalagan
Aug 26, 2023,03:03 PM IST
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் மாணவனை, சக மாணவர்களை விட்டு கன்னத்தில் அறையச் சொன்ன டீச்சருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ராகுல் காந்தி முதல் பல்வேறு அரசியல் கட்சியினரும் இதைக் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் இதெல்லாம் "ஒரு சாதாரண விஷயம்" என்று அந்த டீச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி. இவர் தனது வகுப்பில் ஹோம்ஒர்க் செய்து வராத ஒரு முஸ்லீம் மாணவனை நிற்க வைத்து ஒவ்வொரு மாணவராக வந்து அவரது கன்னத்தில் அறையுமாறு கூறுகிறார். அதன்படி மாணவர்கள் வந்து அந்த மாணவனை கன்னத்தில் அறைந்து செல்கின்றனர். அடி வாங்கிய அந்த மாணவன் அழுதபடி நிற்கிறான்.



இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி டிவீட் போட்டிருந்தார். அதில், அப்பாவி மாணவர்களின் மனதில் விஷத்தை விதைக்கும் செயல் இது. அதிலும் ஒரு புனிதமான பள்ளிக்கூடத்தில் இப்படி ஒரு வெறுப்புணர்வை விதைப்பது அதிர்ச்சி தருகிறது. இவரை விட மோசமான டீச்சர் உலகத்தில்  இருக்க முடியாது என்று கடுமையாக சாடியிருந்தார்.

சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இந்த செயலைக் கண்டித்திருந்தார். அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சமூகத்துக்கே பெரும் இழுக்கு இவர் என்றும் சாடியிருந்தார். பாஜக எம்.பி. வருண் காந்தியும் இதை கடுமையாக கண்டித்திருந்தார்.

வருண் காந்தி கூறுகையில், அறிவைக் கற்றுத் தரும் கோவிலில் இப்படி ஒரு விஷத்தை பரப்பும் இந்த ஆசிரியை நாட்டுக்கே மிகப் பெரிய அவமானத்தைத் தேடிக் கொடுத்துள்ளார் என்று சாடியிருந்தார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அந்த ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் முதலில் புகார் கொடுக்க தயங்கினர். தற்போது மாணவனின் தந்தை புகார் கொடுத்ததைத் தொடர்ந்து டீச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



இதற்கிடையே, இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா.. இதைப் போய் பெரிதுபடுத்துகிறார்களே என்று டீச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர்தான் கண்டிப்பாக இருக்குமாறு என்னிடம் தொடர்ந்து சொல்லி வந்தனர். இதனால்தான் நான் கண்டிப்பு காட்டினேன். நான் மாற்றுத்திறனாளி ஆசிரியை. இதனால்தான் என்னால் எழுந்து போக முடியாததால்தான் பிற மாணவர்களை விட்டு அடிக்கச் சொன்னேன். இந்த வீடியோவை எடுத்ததே அந்த மாணவனின் சகோதரன்தான். கடைசியில் மத ரீதியாக இதைத் திருப்பி விட்டனர்.

இது ஒரு சாதாரண விஷயம். பள்ளிக்கூடங்களில் சாதாரணமாக நடப்பதையெல்லாம் மத ரீதியாக பார்க்க ஆரம்பித்தால் எப்படி. நான் அடிக்கச் சொன்னது தவறுதான். அதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இதை மத ரீதியாக பார்த்தால் தவறு.

அனைத்து அரசியல்வாதிகளையும் நான் கேட்டுக் கொள்வது, இது சாதாரண விஷயம். ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் டிவீட் போடும் அளவுக்கு இது பெரிய தவறு இல்லை. இப்படி செய்தால் ஆசிரியர்கள் எப்படி சுதந்திரமாக பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்க முடியும் என்றார் அவர்.

டீச்சர் சொல்வது போல இது மத ரீதியானது இல்லை என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு மாணவனை பிற மாணவர்களை விட்டு எப்படி அடிக்கச் சொல்லலாம்.. அதுவே அடிப்படைத் தவறுதானே.. அதிலும் இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை இப்படி செய்யச் சொன்னால் நாளை அது பிரச்சினையாகும், மாணவர்களின் மனதில் நஞ்சைக் கலக்கும் என்று கற்றறிந்த அந்த ஆசிரியைக்குத் தெரிந்திருக்க வேண்டாமா.. முதலில் மாணவனை அடிக்க வேண்டும் என்று நினைப்பதே தவறு.. அடிக்காமல் கண்டிப்பு காட்ட எத்தனையோ வழிகள் உள்ளன.. அதைச் செய்திருக்கலாமே..  "நான் ஒரு மாற்றுத் திறனாளி" என்று காரணம் கூறும் ஆசிரியையின் செயல் நிச்சயம் தவறு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.