உங்க இஷ்டத்துக்கு கண்டபடி கதை அடிக்காதீங்க.. யூடியூபர்கள் மீது பாடகி சைந்தவி கடும் அதிருப்தி!

Su.tha Arivalagan
May 16, 2024,06:40 PM IST

சென்னை: என்னைப் பற்றியும், ஜிவி பிரகாஷ் குறித்தும் இஷ்டத்திற்கு கண்டபடி யாரும் எதுவும் பேச வேண்டாம். இது மிகவும் மன வேதனையைத் தருகிறது என்று பின்னணி பாடகி சைந்தவி கூறியுள்ளார்.


இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் தங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தங்களது தனிப்பட்ட பிரைவசியை மதிக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால்  பல யூடியூப் சானல்களில் அவர்கள் குறித்து பல்வேறு தகவல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இதனால் பரபரப்பு நீண்டு கொண்டிருக்கிறது.


இதுபோல பேசுவது, எழுதுவது தவறு என்று ஜிவி பிரகாஷ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். உங்களது பேரன்பும், அக்கறையும் கூட எங்களை காயப்படுத்துகிறது. எங்களை தனியாக விட்ருங்க என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது பாடகி சைந்தவியும் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 




நாங்கள் எங்களது பிரைவசியை மதியுங்கள் என்று கேட்டுக் கொண்டும் கூட சில யூடியூபர்கள் எங்களைப் பற்றி இஷ்டத்திற்கு கதைகளைப் புணைவதும், பேசுவதும் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எங்களது விவாகரத்துக்கு வெளிக் காரணங்கள் எதுவும் இல்லை. இதை முதலில் எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.


தேவையில்லாமல், அடிப்படை ஆதாரம் இல்லாமல், ஒருவரின் கேரக்டரை சிதைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. விவாகரத்து என்பது எங்களது சிறந்த எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இருவரும் இணைந்து எடுத்த சுமூகமான முடிவு.


ஜிவி பிரகாஷும், நானும் 24 வருட காலம் நண்பர்களாக இருக்கிறோம். பள்ளிக் காலத்திலிருந்தே இருவரும் நண்பர்கள். அந்த நட்பை தொடர்ந்து பராமரிப்போம் என்று கூறியுள்ளார் சைந்தவி.


ஜிவி பிரகாஷ்


இந்த அறிக்கையை ஜிவி பிரகாஷ் குமாரும் தனது எக்ஸ் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்துள்ளார். மேலும், சில சேனல்கள் எழுதும் கதைகள், சொல்லும் காரணங்கள் எல்லாமே கற்பனையானவை, உண்மைக்குப் புறம்பானவை. சிலர் கேரக்டரை சிதைப்பதை வசதியாக செய்து கொண்டு வருகிறார்கள். அவர்களது கற்பனைக்கேற்ப கதைகளை அடித்து விட்டுக் கொண்டுள்ளனர். அவர்களைத் தவிர இந்த கடினமான காலத்தில், எங்களுக்கு ஆதரவாக இருக்கும் மற்ற அனைவருக்கும் எங்களது நன்றிகள் என்று கூறியுள்ளார்.