சென்னை கொண்டு வரப்பட்டது பவதாரணி உடல்.. இளையராஜா வீட்டில் அஞ்சலி செலுத்த குவிந்த பிரபலங்கள்

Meenakshi
Jan 26, 2024,05:25 PM IST

சென்னை: பின்னணிப் பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் உடல் இலங்கையிலிருந்து இன்று சென்னை கொண்டு வரப்பட்டு, அவரது தாய் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


பவதாரணி மறைவுக்கு கமல்ஹாசன்,  ஏ.ஆர்.ரஹ்மான், விஷால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி  நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 47. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றார். அங்கு சிகிச்சை பலன் இன்று நேற்று  மாலை காலமானார்.


அவரது உடல் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பாடகி ஷோபா சந்திரசேகர், பாடகர் மனோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு பிரபலங்களும் பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.




அஞ்சலிக்குப் பின்னர் பவதாரணி உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவி ஜீவா ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட வளாகத்திலேயே பவதாரணி உடலும் அடக்கம் செய்யப்படவுள்ளது. 


இதற்கிடையே பவதாரணி மறைவுக்கு தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


ஏ.ஆர். ரஹ்மான்


மயிலிறகாய்த் தமிழர் மனதை எல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககன வெளி எங்கும் கதிரொளி விரிகிறது. இசைஞானி இளையராஜா யுவன் சங்கர் ராஜா கார்த்திக் ராஜா.  Our hearts are with you in this time of sorrow.


கமல்ஹாசன்


மனம் பதைக்கிறது. சகோதரர் இளையராஜாவைத்  தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன்.பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று என கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.


விஷால்


அன்புள்ள பவத்தா..  இதை ஜீரணிக்க முடியாமல் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். நீங்கள் எங்களுடன் இருக்கப் போவதில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இளையராஜாவின் மகளாகவோ யுவனின் சகோதரியாகவும் உங்களை அறிந்ததை விட என் சகோதரியாக உங்களை மிஸ் செய்கிறேன். ஒரு நல்ல உள்ளம் இவ்வளவு விரைவில் எங்களை விட்டு பிரிந்து சென்றுள்ளது. கடந்த சில வாரங்களாக நான் விரும்பும் நபர்களை ஏன் இழக்கிறேன் என தெரியவில்லை. நீங்கள் என்றும் நினைவு கூறப்படுவீர்கள்.


இயக்குநர் மாரி செல்வராஜ் 


ஒலியிலே ஒளி பாய்ச்சிய தேவதையே இனி என் விழி காண் மயில் நீ என வருத்தத்துடன் இரங்கலை தெரிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.