உற்சாகமாக ஆடிப் பாடி முடித்த அடுத்த நொடியில்.. சிங்கப்பூர் சிவாஜி அசோகனின் பரிதாப முடிவு!

Su.tha Arivalagan
Oct 14, 2024,02:12 PM IST

சிங்கப்பூர்:   சிங்கப்பூரைச் சேர்ந்த அசோகன் என்ற மேடைக் கலைஞர் ஆடிப் பாடி முடித்த பின்னர் மாரடைப்பு வந்து அப்படியே கீழே விழுந்து உயிரிழந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.


அசோகனுக்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான் அவரது நிரந்தப் பெயராகவும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மத்தியில் உள்ளது.. அதுதான் சிங்கப்பூர் சிவாஜி. அச்சு அசல் சிவாஜி கணேசன் போலவே இருப்பார். அவரைப் போலவே நடப்பார், ஆடிப் பாடுவார்.. நடிப்பார். சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.




திருமணங்கள் உள்ளிட்ட விசேஷங்கள், விழாக்கள், கூட்டங்கள் என தமிழர்கள் கூடும் இடங்களில் அசோகன் கண்டிப்பாக கச்சேரி செய்வார். சிவாஜி கணேசன் பாடல்களுக்கு இவர் ஆடிப் பாடுவது வெறுமனே மேடையில் மட்டுமே இருக்காது. மாறாக ஆடியன்ஸுடன் சேர்ந்து ஆடிப் பாடுவார்.. அதுதான் விசேஷமே.. சிவாஜியேவந்து தங்களது மத்தியில் நடமாடும் உணர்வை மக்கள் பெறுவார்கள்.


இப்படி மக்களை மகிழ்வித்து வந்த சிவாஜி அசோகன் சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடிப் பாடிய பின்னர் அடுத்த நொடியே மாரடைப்பு வந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது முழுப் பெயர் அசோகன் முனியாண்டி. 60 வயதாகும் இவர்,  சிவாஜி கணேசன் போல மட்டுமல்லாமல் அசோகன், எம்ஜிஆர் போலவும் ஆடிப் பாடி நடிப்பார். சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இவர் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். 


அவர் விழாவில் ஆடிப் பாடிய பின்னர் மயங்கி விழுந்து மரணம் அடையும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அசோகனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறவுள்ளது. அசோகனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், நீதனாதன் என்ற மகன், மகாலட்சுமி என்ற மகள் மற்றும் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்