சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் குதித்தார் தர்மன் சண்முகரத்தினம்!

Su.tha Arivalagan
Jul 27, 2023,09:38 AM IST
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான தர்மன் சண்முகரத்தினம் குதித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ஆவார்.

தனது மனைவி ஜேன் யூமிகோ இட்டோகியுடன் இணைந்து சிங்கப்பூர் சந்தித்து வரும் சவால்கள், அதிலிருந்து மீண்டு வருவது எப்படி, உலக அளவிலும், உள்ளூர் அளவிலும் எப்படி சிங்கப்பூரை மேம்படுத்துவது என்பது குறித்து விரிவாக அவர் பேசியுள்ளார். 



66 வயதான தர்மன் சண்முகரத்தினம், கடந்த மாதம்தான் அரசியலிலிருந்து விலகினார். கடந்த 22 வருடங்களாக அவர் தீவிர அரசியலில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தனது அதிகாரப்பூர்வ ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் அவர் தொடங்கினார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் தர்மன் சண்முகரத்தினம் பேசுகையில், சிங்கப்பூரின் கலாச்சாரத்தை புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வலுவாக உள்ளது. இதனால்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். சிங்கப்பூர் குடிமக்கள் ஒவ்வொருவருடனும் இணைந்து உலகின் மிகப் பிரகாசமான வெளிச்சப் புள்ளியாக நமது நாட்டை நிலை நிறுத்த பாடுபடுவேன். புதிய சகாப்தத்துக்கான ஜனாதிபதியாக நான் இருப்பேன் என்றார் தர்மன் சண்முகரத்தினம்.

சிங்கப்பூர் ஜனாதிபதி தேரத்ல் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாக்கோபின் பதவிக்காலம் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது.

தர்மன் சண்முகரத்தினத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரும், புகழும் உள்ளது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அவரது அரசியல் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. நீண்ட கால அரசியல் அனுபவம் உடையவர் என்பதால் மக்களின் நம்பிக்கையையும் அவர் பெற்றுள்ளார். பொருளாதார நிபுணரான தர்மன் சண்முரத்தினம், அரசு அதிகாரியாக முன்பு வேலை பார்த்தவர். அதன் பின்னர் அரசு வேலையை விட்டு விட்டு 2001ம் ஆண்டு அரசியலில் இணைந்தார்.



கல்வித்துறை, நிதித்துறை உள்ளிட்ட அமைச்சர் பொறுப்புகளை வகித்துள்ள அவர் 2011ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். பல்வேறு சர்வதேச நிறுவனங்களிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். சர்வதேச நிதியம், உலக பொருளாதார அமைப்பு, ஐ.நா ஆகியவை அதில் சில.

வருகிற ஜனாதிபதி தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் தவிர, ஜார்ஜ் கோ, என் காக் சாங் ஆகிய மேலும் இரு முக்கிய வேட்பாளர்களும் களத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.