சிகப்பி கிழவி ((சின்னஞ் சிறுகதை)
- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
என்ன பாட்டி .... கவலையா... இருக்க..!! கண்ணெல்லாம் கலங்கி இருக்கு...!!
( வாயில்லா ஜீவன், சிகப்பி கிழவியின், தோளைத் தொட்டு, பாசத்தோடு பார்த்தது.)
இல்ல.. ராசா.. நான் பெத்த மகன், இனிமே வீட்டுக்கு வராதேன்னு, என் சேலை பையை தூக்கி, கோவமா ரோட்ல எறிஞ்சுட்டான் இன்னிக்கி.
அதான், என் ஈரக்கொலை (நெஞ்சு) தவிக்குது ராசா. இனிமே நான் எங்கே போவேன்..? யார்கிட்ட போவேன்..?
ஏன் பாட்டி அப்படி சொன்னாரு...? (வாயில்லா அந்த ஜீவன் தனது பார்வையால் கேட்டது.)
எனக்கு ...கஞ்சி ஊத்த முடியலையாம்... என் உடம்பு நாத்தம் அடிக்குதாம்...!! நான் திண்ணையில் படுத்து கிடக்கிறது அவனுக்கு அசிங்கமா இருக்காம். ஏதேதோ சொல்றான். அதுனால அவன் தூக்கிப்போட்ட, சேலை பையை எடுத்துகிட்டு வந்துட்டேன்.
அப்படியா பாட்டி... சரி... இனிமே நீ என் கூட வந்துரு . நான் அந்த மரத்துக்கு அடியில் தான் தூங்குவேன். அந்த மரத்துக்குப் பக்கத்துல ,ஒரு இடிஞ்சு போன வீடு இருக்கு. அங்கே யாரும் இல்லை. அங்கே நீ படுத்துக்கோ.
நான் உனக்கு சாப்பிடறதுக்கு, பழங்கள் ஏதாவது பறிச்சு கொண்டாந்து தர்றேன், என கையில் சைகை செய்தது.
பாட்டி..... உன்னை நான் நல்லா பாத்துக்கிறேன் என்பது போல கிழவியின் கையையும் தோளையும் தொட்டது.
கிழவிக்கு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஐந்தறிவு ஜீவன், உனக்கு இருக்கிற பாசம் கூட, நான் பத்து மாதம் சுமந்து பெத்த , ஆறறிவு கொண்ட ,என் மவனுக்கு இல்லையே ராசா.. என்றவளின் தலை லேசாக சாய்ந்தது. கண்கள் சொருகின. சற்று நேரத்தில் மிளகாய் குவியலின் மீது சாய்ந்த சிகப்பி கிழவி, பிறகு எழுந்திருக்கவே இல்லை.
ஐந்தறிவு ஜீவன் கண்ணீரோடு சிகப்பி கிழவியின் முகத்தை தொட்டுப் பார்க்கிறது, என்ன செய்வது எனத் தெரியாமல்...!!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).