நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் "நேசமணி"யைக் கொடுத்து விட்டு.. மறைந்து போன சித்திக்!
Aug 09, 2023,09:58 AM IST
சென்னை: இயக்குநர் சித்திக்கை அத்தனை சீக்கிரம் தமிழ் திரை ரசிகர்கள் மறக்க முடியாது.. மலையாளத்தில் பிரபலமாக விளங்கிய சித்திக், தமிழிலும் அழுத்தமான சில படங்களைக் கொடுத்துச் சென்றவர்.
சித்திக் - லால் இந்த இரட்டையர்கள் மலையாள சினிமா உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இணைந்து திரையுலகில் உயர்ந்தவர்கள், இயக்கியவர்கள். தனித் தனியாக பிரிந்தும் சாதித்தவர்கள். இணை பிரியாத நண்பர்களும் கூட.
சித்திக் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. நீண்ட காலமாக கல்லீரல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்படவே கொச்சியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
சித்திக்கை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் மறக்க முடியாது.. தமிழ் ரசிகர்களுக்காக அவர் கொடுத்த படங்கள் அத்தனையும் முத்துக்கள்.
2001ம் ஆண்டு வெளியான பிரண்ட்ஸ்.. இதுதான் சித்திக்கின் முதல் தமிழ்ப் படம். இன்று வரை தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை நிறைத்து நிற்கும் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தை மறக்க முடியுமா.. அந்த காமெடி பேக்கேஜ் எந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து திரைப்படத்தின் பிற பகுதிகளையே தூக்கிச் சாப்பிட்டது என்பது வரலாறு. மலையாள ஒரிஜினலை விட தமிழில்தான் இந்த காமெடி பகுதி மிகப் பெரிய ஹிட்டடித்தது. சித்திக்கின் அருமையான இயக்கத்திற்கு இது சான்று.
2004ம் ஆண்டு எங்கள் அண்ணா.. வி��யகாந்த்தை வைத்து உருக உருக பண்ணிய கதை இது. கூடவே அட்டகாசமான காமெடி. இதிலும் காமெடி மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அருமையான குடும்பக் கதையும் கூட. எல்லாவற்றையும் கலந்து பிரமாதமாக கொடுத்திருப்பார் சித்திக்.
3வது படம் சாது மிரண்டா.. நல்ல படம் என்று பெயர் வாங்கியது. பிரசன்னா, காவ்யா மாதவன் நடிப்பில் உருவான இப்படத்தைத் தொடர்ந்து ஒரு அருமையான படத்தைக் கொடுத்தார் சித்திக். அதுதான் பாடிகார்ட்.
மலையாளத்தில் பாடிகார்ட் என்ற பெயரில் திலீப்பை வைத்து இயக்கிய இப்படம் மிகப் பெரிய ஹிட்டடித்தது. அந்த ஹிட் அடுத்தடுத்து தமிழ், இந்தியிலும் பாய்ந்தது. விஜய்யை வைத்து இந்தப் படத்தை காவலன் என்ற பெயரில் இயக்கினார் சித்திக். மலையாளத்தை மிஞ்சிய வெற்றியை தமிழ் பார்த்தது. இந்தியில் சல்மான் கான் நடிப்பில் பாடிகார்ட் என்ற பெயரில் வெளியான இப்படம் அங்கு வசூல் சாதனையை நிகழ்த்தியது.
தமிழில் சித்திக் கடைசியாக இயக்கிய படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.