சட்டுப்புட்டுன்னு ... எல்லாரும் இந்தி பிக் பாஸுக்கு மாறுங்கப்பா.. ஸ்ருதிகா செமையா சம்பவம் பண்றாப்ள!

Su.tha Arivalagan
Oct 13, 2024,01:16 PM IST

மும்பை: தமிழ் பிக் பாஸ் வழக்கம் போல ஒரே கலாட்டா, குட்டிக்கலாட்டா, பெரிய கலாட்டா என்று போயிட்டிருக்கு.. ஆனால் இந்தி பிக் பாஸ் அதிரடி கலகலப்பாக களை கட்டியுள்ளது. எல்லாத்துக்கும் காரணம் நம்ம ஊரு புள்ளை.. ஸ்ருதிகாதான்!


தேங்காய் சீனிவாசன் பேத்தி என்ற அடையாளத்தை படு வேகமாக மாற்றி விட்டு ஸ்ருதிகாவின் தாத்தாதான் தேங்காய் சீனிவாசன்  என்று மாற்றி விடுவார் போல ஸ்ருதிகா. அந்த அளவுக்கு அவருக்கென்று ஒரு பெயர் அதி வேகமாக உருவாகி வருகிறது. அதுவும் அகில இந்திய அளவில் படு வேகமாக பாப்புலர் ஆகி வருகிறார் ஸ்ருதிகா.




தமிழில் சில படங்களில் நடித்துள்ள ஸ்ருதிகா, அதன் பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டார். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குத் வித் கோமாளியில் கலந்து கொண்டு அதிரடியாக வெற்றியும் பெற்றார். இப்போது இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 18வது சீசனில் கலந்து கொண்டுள்ளார் ஸ்ருதிகா.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முதல் தமிழ்ப் பெண் ஸ்ருதிகாதான். நிகழ்ச்சியின் தொடக்கத்தின்போது மேடையில் வைத்து சல்மான் கான் அறிமுகப்படுத்தியபோதே கலகலப்பான தனது அதிரடியைக் காட்டி அனைவரையும் வியக்க வைத்தார் ஸ்ருதிகா. சல்மான் கான் இவரை அறிமுகப்படுத்தியபோது, குறுக்கிட்ட ஸ்ருதிகா, சார் சார் நான் நாலு தமிழ்ப் படத்தில் நடிச்சிருக்கேன்.. எல்லாமே ஹீரோயின்தான்.. ஆனால் நாலுமே பிளாப்பு என்று கூறி சிரித்தபோதே, சல்மான் கானே விழுந்து விழுந்து சிரித்தார். இம்புட்டு வெள்ளந்தியா இருக்கே இந்தப் பொண்ணு என்று முதல் நாளே இந்தி ரசிகர்கள் வியந்து போய்  படு வேகமாக ஸ்ருதிகாவின் ரசிகர்களாகி விட்டனர்.


இப்போது ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் வீட்டில் ஸ்ருதிகாவின் அதிரடியான கலகலப்பு ஷோவையே களை கட்ட வைத்துள்ளது. ஸ்ருதிகாவின் கலகலப்பு இல்லாத நாளே கிடையாது.. விதம் விதமாக கலக்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிகா. டீ போடும் ஒரு  நிகழ்வின்போது சக போட்டியாளரிடம், ரயில்ல டீ விப்பாங்க தெரியுமா.. எப்படி சொல்வாங்க தெரியுமா.. அதிலயும் தென்னிந்தியாவில் எப்படி டீ விப்பாங்க தெரியுமா என்று டீ காப்பி டீ காப்பி என்று அவர் கூறிய விதம் அத்தனை பேரையும் சிரிக்க வைத்து விட்டது.




அதேபோல இன்னொரு போட்டியாளர் பெண்ணுக்கு தமிழ் கற்றுத் தருகிறார். சிரிக்க சிரிக்க அவர் கற்றுத் தரும் விதமும், அந்தப் பெண் சொல்ல முடியாமல் தவித்தபோது இவர் சிரிப்பதும் செம ஜாலியாக இருக்கிறது.


சிலரைப் பார்த்தால் நமக்கு பட்டென்று ஒரு சந்தோஷமும், உற்சாகமும் தொற்றிக் கொள்ளும். அவர்கள் எது செய்தாலும் நமக்கு சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் தரும்.. அப்படிப்பட்டவர்கள் மிக மிக அரிதானவர்களும்  கூட.. அப்படிப்பட்ட பெண்தான் ஸ்ருதிகா.. பிக்பாஸ் ஷோவை மொத்தமாக மெருகேற்றி வேற லெவலுக்குக்  கொண்டு போய் விட்டார் ஸ்ருதிகா.


பேசாம டெய்லி, இந்தி பிக் பாஸ் பார்க்கலாம் போலயே!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்