ஜெயலலிதாவையே எதிர்த்து தில்லாக நின்றவர்.. அதிமுகவில் ஐக்கியமான சிம்லா முத்துச்சோழன்!
சென்னை: திமுக குடும்பத்திலிருந்து ஒரு பெண் தலைவர் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். அவர்தான் சிம்லா முத்துச்சோழன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே எதிர்த்து ஆர்.கே.நகர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டவர் சிம்லா முத்துச்சோழன். இவர் சாதாரணமான ஆள் இல்லை. முன்னாள் திமுக அமைச்சர் எஸ்.பி. சற்குணத்தின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன். திமுக மகளிர் அணியில் நிர்வாகியாக இருந்து வந்தவர்.
2016 சட்டசபைத் தேர்லில் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு எதிராக திமுக சார்பில் களம் இறக்கப்பட்டார் சிம்லா முத்துச்சோழன். அத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு கடும் டஃப் கொடுத்த சிம்லா முத்துச்சோழன், 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்தத் தேர்தலுக்குப் பின்னர் சிம்லா கட்சியில் சரிவர கவனிக்கப்படவில்லை. தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்து வந்தார் சிம்லா முத்துச்சோழன். இந்த நிலையில்தான் இன்று அதிரடியாக அவர் அதிமுகவில் இணைந்து விட்டார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார் சிம்லா.
சிம்லா முத்துச்சோழனின் மாமியாரான எஸ்.பி.சற்குணம், திமுகவில் முக்கிய பெண் தலைவராக இருந்தவர். மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார் சற்குணம் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவிலிருந்து விலகியது குறித்து சிம்லா முத்துச்சோழன் கூறுகையில், அங்கு பணத்திற்குத்தான் இப்போது மதிப்பு அதிகம். உழைப்புக்கு மதிப்பில்லை. என்னை தொடர்ந்து ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலே ஏற்பட்டது. இதனால்தான் அதிமுகவில் இணைந்தேன். இங்கு உழைப்பவர்களுக்கு நிச்சயம் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.