கிரிக்கெட் பயணத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.. நினைவுகளுடன் விடை பெறுகிறேன்.. ஷிகர் தவான்
Aug 24, 2024,09:58 AM IST
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எனது கிரிக்கெட் பயணத்தின் அத்தியாயத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். அதேசமயம், எண்ணற்ற நினைவுகளும், நன்றியும் எப்போதும் என்னுடன் பயணிக்கும்.. என் மீது அன்பு காட்டிய, ஆதரவு அளித்த அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.
டெல்லியில் பிறந்தவரான ஷிகர் தவான், இந்திய அணியில் மிக முக்கியமான வீரராக ஒரு காலத்தில் வலம் வந்தவர். தனது சர்வதேச ஒரு நாள் போட்டியை விசாகப்பட்டினத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியவர். ஆரம்பத்தில் இவர் சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்டவர். பின்னர் ஒரு நாள் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ஷிகர் தவான்.
கடைசியாக ஷிகர் தவான் 2022ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்று ஆடினார். அதன் பின்னர் அவரது இடம் சுப்மன் கில்லுக்குப் போய் விட்டது. 38 வயதான ஷிகர் தவான் வீடியோ மூலம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷிகர் தவான் கிரிக்கெட் ஆட வந்தபோது தொடக்கத்தில் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. பல்வேறு தடைகள், தடங்கல்களுக்குப் பிறகு 2013ல்தான் அவர் தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியில் வலுவான இடத்தை உறுதி செய்தார். அதன் பின்னர் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இவரது முக்கியத்துவம் தொடர்ந்து இருந்து வந்தது.
"எனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்கிறேன். அதேசமயம், எனது நாட்டுக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன் என்ற நிறைவு எனக்கு உள்ளது. பிசிசிஐ, டெல்லி கிரிக்கெட் சங்கம் ஆகியோருக்கு எனது நன்றிகள் எப்போதும் உண்டு. எனது ரசிகர்கள்தான் எனது உற்சாகம். அவர்கள் காட்டிய அன்பும், ஆதரவும் எப்போதும் மறக்க முடியாதது" என்று உணர்ச்சிகரமாக கூறியுள்ளார் ஷிகர் தவான்.
2013 மார்ச் 16ம் தேதிதான் அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 85 பந்துகளில் சதம் போட்டு அதிர வைத்தார். அதையே பின்னர் இரட்டை சதமாக்கி அனைவரையும் வியக்கவும் வைத்தார். அதேபோல 2013 மற்றும் 2017 சாம்பின்ஸ் டிராபி தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக அடுத்தடுத்து சாதனை படைத்தார். அனைத்து ஐசிசி தொடர்களிலும் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி ரன் குவித்த வீரரும் ஷிகர் தவான்தான். மேலும் 2015 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன் அடித்த இந்திய வீரரும் ஷிகர் தவான்தான்.
இந்திாயவுக்காக 167 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 6793 ரன்களும், 7 சதங்கள் மற்றும் 5 அரை சதங்களும் எடுத்துள்ளார். டி 20 போட்டிகளைப் பொறுத்தவரை 68 போட்டிகளில் ஆடி 1759 ரன்களும், 11 அரை சதங்களும் விளாசியுள்ளார். 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஷிகர் தவான் 2315 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 சதங்கள், 5 அரை சதங்கள் அடக்கம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்