ஷேக் ஹசீனா கட்சி எம்.பியாக இருந்த.. கிரிக்கெட் வீரருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. அணியில் நீடிக்க அனுமதி

Su.tha Arivalagan
Aug 15, 2024,03:30 PM IST

டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியிலிருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டு வரும் நிலையில் அந்த நாட்டு முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு மட்டும் விதி விலக்காக தொடர்ந்து கிரிக்கெட் விளையாட அந்த நாட்டு இடைக்கால அரசு அனுமதி அளித்துள்ளது.


இன்னொரு முன்னாள் கேப்டனும், ஷேக் ஹசீனா கட்சி எம்பியாக இருந்தவருமான மாஷரப் மோர்தசாவின் வீட்டை வங்கதேச போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர். அதேபோல அந்தக் கட்சியின் தலைவருக்குச் சொந்தமான ஸ்டார் ஹோட்டலும் தீவைத்து எரிக்கப்பட்டது. அதில் பலர் உயிருடன் கருகிப் பிணமானார்கள். அதேபோல ஷேக் ஹசீனாவின் தந்தையும், தேசத் தந்தையாக போற்றப்பட்டவருமான முஜிபுர் ரஹ்மான் வேடத்தில் நடித்த நடிகரும் கூட கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.




இந்த நிலையில் முன்னாள் கேப்டனும், ஹசீனா கட்சியில் எம்பியாக இருந்தவருமான ஷாகிப் அல் ஹசனுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் ஹசீனா கடைசியாக நடத்திய தேர்தலில் எதிர்க்கட்சிகளை  எல்லாம் கோர்ட்டுகள் மூலமாக தண்டித்தும், சிறையில் அடைத்தும் ஒடுக்கி விட்டுத்தான் தேர்தலை நடத்தினார். போட்டியே இல்லாமல் அவரது கட்சி வேட்பாளர்கள் எம்.பிக்கள் ஆனார்கள். மிகப் பெரிய முறைகேடுகளை அப்போது ஹசீனா செய்தார் என்று பரபரப்பான குற்றச்சாட்டும் எழுந்தது.


அந்த தேர்தலின்போது எம்பி ஆனவர்கள்தான் மோர்தசாவும், ஷாகிப் அல் ஹசனும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி சார்பில் ஷாகிப் அல் ஹசனும் பங்கேற்க அந்த நாட்டு இடைக்கால அரசு அனுமதி அளித்துள்ளதாம். கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை இடைக்கால அரசில் விளையாட்டுத்துறையை கண்காணித்து வரும் ஆசிப் மகமூது இதற்கான ஒப்புதலை அளித்துள்ளாராம். இவர்தான் இடைக்கால விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் வங்கதேசத்தில் போராட்டம் நடத்திய மாணவர் தலைவர்களில் ஒருவர் ஆவார். 26 வயதுதான் ஆகிறது.


இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவரான இப்திகார் அகமது கூறுகையில், இடைக்கால விளையாட்டுத்துறை அமைச்சர் முன்பு அணி விவரங்களைத் தெரிவித்தோம். அதில் ஷாகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவரது பெயருக்கு அமைச்சர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. திறமையின் அடிப்படையில் அணித் தேர்வு இருக்க வேண்டும் என்று மட்டும் தெரிவித்தார் என்றார் அவர்.


இதையடுத்து தற்போது லாகூரில் முகாமிட்டுள்ள வங்கதேச அணியுடன் ஷாகிப் அல் ஹசன் இணைந்துள்ளார். வங்கதேசத்தில் கலவரம் வெடித்தபோது அவர் நாட்டிலேயே இல்லை. கனடாவில் இருந்தார். அங்கு கிரிக்கெட் விளையாடி வந்தார். கலவரம் குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை. கலவரம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பிலிருந்தே அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை. இது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில்தான் மீண்டும் அவர் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.