தேவையில்லாததை பேச வேண்டாம்.. நல்லதில்லை.. ராகுல் காந்திக்கு சரத் பவார் அட்வைஸ்
டெல்லி: பிரச்சினை எதுவோ அதுகுறித்து மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு நமது நோக்கம் திசை திரும்பி விடக் காரணமாக இருக்கக் கூடாது என்று ராகுல் காந்திக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் விவகாரத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. இந்த நிலையில் தகுதி நீக்கத்திற்குப் பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஏன் நீங்கள் உங்களது கருத்துக்காக மன்னிப்பு கேட்க தயங்குகிறீர்கள் என்ற செய்தியாளர் கேள்விக்கு, நான் சாவர்க்கர் இல்லை, காந்தி என்று பதிலளித்திருந்தார் ராகுல் காந்தி.
இந்த விவகாரம் தற்போது காங்கிரஸ் கூட்டணிக்குள் அனலைக் கிளப்பியுள்ளது. உத்தவ் தாக்கரே, ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போல. அவரை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் உத்தவ் தாக்கரே. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் 18 கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தின.
அப்போது சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியுடனும் சரத் பவார் சில முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து தவறு என்று அப்போது சரத் பவார் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
பவார் கூறுகையில்உணர்வுப்பூர்வமான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சிவசேனா கட்சியினருக்கு வீர சாவர்க்கர் முக்கியமானவர். எனவே அவர்களைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.
மகாராஷ்டிராவில் சாவர்க்கர் மதிக்கப்படுகிறார், போற்றப்படுகிறார். எனவே அவரது பெயரை தவறாக பயன்படுத்துவது நமக்கு எதிராகப் போய் விடும். சாவர்க்கர் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்ததில்லை. நமது உண்மையான போராட்டம் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிரானதாகத்தான் இருக்க வேண்டும்.
ஜனநாயகப் பிரச்சினைகள் குறித்துத்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். சர்ச்சைகள் நம்மை பிரச்சினையிலிருந்து திசை திருப்பிவிடும். நாம் உணர்வுப்பூர்வமாக பேசுவதை விட உண்மையான பிரச்சினைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தினால் நல்லது என்றார் சரத் பவார். அவரது கருத்தை காங்கிரஸ் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனராம். சாவர்க்கர் குறித்த தங்களது வேகத்தைக் குறைத்துக் கொள்வதாகவும் அவர்கள் பவாரிடம் கூறினார்களாம்.