பெண்களுக்கு.. சமையல் கட்டைத் தவிர வேற என்ன தெரியும்?.. 92 வயது காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சலசலப்பு!

Su.tha Arivalagan
Mar 30, 2024,06:32 PM IST

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மிகவும் வயதான எம்எல்ஏ என்ற பெயரைப் பெற்றவரான 92 வயதான எம்எல்ஏ சிவசங்கரப்பா பேசியுள்ள பேச்சுக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.


கர்நாடக மாநிலம் தாவனகரே நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் காயத்ரி சித்தேஸ்வரா குறித்து மூத்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஷாமனூர் சிவசங்கரப்பா கூறியுள்ள கருத்துக்கள்தான் இப்போது பெண்களிடையே கடுப்பை ஏற்றியுள்ளது. 


முன்னாள் மத்திய அமைச்சர் சித்தேஸ்வராவின் மனைவி காயத்ரி சித்தேஸ்வரா, தற்போது தாவணகரே தொகுதியிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் குறித்து மூத்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஷாமனூர் சிவசங்கரப்பா சலசலப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.




தாவணகரேவில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசும்போது, முதலில் தாவணகரே பிரச்சினைகள் குறித்து பாஜக வினர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்த தொகுதியின் பிரச்சினைகள் குறித்து என்ன தெரியும். நாம் இந்த பகுதியை வளர்க்க கடுமையாக உழைத்து உள்ளோம். நிறைய பணிகளை செய்துள்ளோம். இதுவே நமக்கு வெற்றி தேடித்தரும். இதைச் சொன்னாலே போதும் நாம் வெற்றி பெற முடியும். ஆனால் அவர்களுக்கு என்ன தெரியும்.. சமையல் கட்டில் சமையல் செய்ய மட்டுமே தெரியும். வேறு என்ன தெரியும். மக்கள் முன்பு நிற்கவோ மக்களிடம் பேசவோ அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. அவர்களுக்கு அந்த பலமும் இல்லை என்று சிவசங்கரப்பா கூறியுள்ளார்.


92 வயதான சிவசங்கரப்பா மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். தாவணகரே தெற்கு தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். சட்டசபையில் மிகவும் வயதான உறுப்பினரும் கூட. காங்கிரஸ் கட்சியின் மிகவும் வயதான எம்எல்ஏவும் கூட. இவரது மருமகள் பிரபா மல்லிகார்ஜூன்தான் வருகிற தேர்தலில் தாவணகரே தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். பாஜக வேட்பாளர் காயத்ரியை மட்டம் தட்டும் வகையிலும் பெண்களை இழிவுடுத்தும் வகையிலும் சிவசங்கரப்பா இவ்வாறு பேசியுள்ளதாக பாஜகவினர் கொந்தளித்துள்ளனர்.


"தாத்தாவுக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை"


இது குறித்து காயத்ரி சித்தேஸ்வரா கூறுகையில் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு தான் சிவசங்கரப்பாவின் கருத்தாகும். இதை அவரது பேச்சு காட்டுகிறது. ஆண்கள் இப்படித்தானே பெண்களைப் பற்றி நினைக்கிறார்கள். பெண்கள் என்றால் சமையல் கட்டோடு நின்று விட வேண்டும் என்ற ஆணாதிக்க மனப்பான்மையைத்தான் சிவசங்கரப்பா வெளிப்படுத்தியுள்ளார். ஏன் வேறு தொழிலில் இன்று பெண்கள் இல்லையா..?


பெண்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் என்ன தொழிலில் வேண்டுமானாலும் சாதிக்க முடியும். வானத்தை தொட முடியும். நாங்கள் இன்று விமானமே ஓட்டுகிறோம். ஆனால் இந்த தாத்தாவுக்கு பெண்கள் முன்னேறியது தெரியவில்லை. பெண்கள் முன்னேறுவது பிடிக்கவில்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சமையல் கட்டு மட்டுமே... குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் வயதானவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் கணவர்மார்களை பார்த்துக்கொள்ள வேண்டும். இது மட்டுமே இந்த ஆண்களுக்குத் தெரிந்த விஷயமாக இருப்பது வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.


இதற்கிடையே சிவசங்கரப்பாவின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் தரப்பட்டுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அவினாஷ் தெரிவித்துள்ளார்.