பஹல்காம் தாக்குதலுக்கு விரைவில் சரியான பதிலடி தரப்படும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்

Su.tha Arivalagan
Apr 23, 2025,06:36 PM IST

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் மாவட்டத்தில் நடந்த வெறித்தனமான தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணமாக தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்களுக்கு விரைவில் கடுமையான பதிலடி தரப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களுக்கு  பதிலடி கொடுப்போம். இந்தியாவிற்கு எதிராக சதி செய்த அனைவரையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.




இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களை தாக்கியவர்களை மட்டும் அல்ல, இந்தியாவிற்கு எதிராக இந்த சதியை செய்ய திரை மறைவில் ஒளிந்திருந்தவர்களுக்கும் சரிாயன பதிலடி தரப்படும். தாக்குதல் நடத்தியவர்களும், அவர்களின் தலைவர்களையும் நாங்கள் விட மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.


அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் கூறுகையில், பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம், இந்தியாவிற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை உள்ளது. அதேசமயம், தேவையான மற்றும் பொருத்தமான ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் எடுப்போம் என்றும் தெரிவித்தார். 


முன்னதாக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி மற்றும் கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஆகியோர் அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதித்தனர். 


புதிதாக திருமணம் ஆன கடற்படை அதிகாரி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட இருபத்தி ஆறு பேர் பஹல்காம் சம்பவத்தில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3 பேர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலுக்கு தாங்களே காரணம் என்று தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


தீவிரவாதிகளின் வரை படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவம் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளது.