விறுவிறுப்பாகும் பாஜக.. கூட்டணிக் கட்சிகளுடன் பேச 7 பேர் கொண்ட குழு.. அறிவித்தார் அண்ணாமலை
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசவும், தேர்தல் பணிகளை முடுக்கி விடவும், 7 பேர் கொண்ட குழுவை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களில் உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்காக ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என ஒவ்வொருவரும் தங்கள் கட்சியுடன் இணைந்துள்ள கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் இறுதிகட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 7 பேர் கொண்ட குழு ஒன்றை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எச் ராஜா, தமிழ்நாடு மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு பாஜகவில் இடம்பெறும் கூட்டணி கட்சிகளுடன் பேசுவது, தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றை செயல்படுத்தும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி பல்லடம் மற்றும் திருநெல்வேலியில் மிகப்பெரிய பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் அனல் பறக்கப் பேசியதால், பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். திமுகவை குறி வைத்து அவர் பேசியது பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கூட்டணி குறித்த கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காகவும், தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காகவும், மாநில அளவில் குழு ஒன்றை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து கூட்டணி கட்சியுடன் பேச்சு மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் வேகம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.