SETC buses: மொத்தம் 200 பஸ்கள்.. வேற லெவல் வசதிகள்.. ஏசி இல்லை.. ஆனால் ஃபேன் இருக்கு..!

Su.tha Arivalagan
Jul 10, 2024,03:47 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) சார்பில்  200 புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளன. விரைவில் இந்தப் பேருந்துகள் புழக்கத்திற்கு வரவுள்ளன.


தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லும் பேருந்துகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தற்போது உள்ள பேருந்துகள் பழையவையாகி விட்டன. பல பேருந்துகள் மோசமான நிலையிலும் உள்ளன. இதையடுத்துப் புதிய பேருந்துகள் வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது புதிதாக 200 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளனவாம்.




முன்பு இருந்ததைப் போலவே பச்சை நிறத்தில் இந்த பேருந்துகள் பளிச்சென காணப்படுகின்றன. அதி நவீன வசதிகளுடன் கூடிய இந்தப் பேருந்துகள் அனைத்தும் நான் ஏசி பேருந்துகள்தான். ஆனால் இதில் சூப்பராக பல வசதிகள் உள்ளன. அதாவது இருக்கைகளுக்கு மேலே மின்விசிறி வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பெண்களுக்கு வசதியாக பேனிக் பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது எதற்கு என்றால், பெண்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் இந்த பட்டனை அழுத்தி டிரைவரை அலர்ட் செய்யலாம். 


இதுதவிர செல்போன் சார்ஜ் செய்து கொள்ளும் பிளக் பாயின்ட்டும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் படித்துக் கொண்டே செல்ல விரும்புவோருக்கு வசதியாக இருக்கைகளுக்கு மேலே ரீடிங் லைட்டும் இருக்கிறது. இதனால் அக்கம் பக்கத்து பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் நாம் படித்துக் கொண்டே பயணிக்க முடியும்.




இருக்கை வசதியுடன், படுக்கை வசதியும் கொண்டதாக இந்த பேருந்துகள் உள்ளன. மேலும் இந்தப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளும், படுக்கைகளும் நல்ல சொகுசாக இருப்பது முக்கியமானது. இவை டபுள் டெக்கர் பஸ்கள் ஆகும். கீழ்த்தளத்தில் படுக்கைகளுடன் இருக்கை வசதியும் உள்ளது. இதனால் வயதான பெண்கள், ஆண்கள், மாற்றுத் திறனாளிகளும் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.