வேகமாக பரவும் குரங்கு அம்மை.. தடுப்பூசி தயாரிக்கப் போவதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு!

Meenakshi
Aug 21, 2024,01:32 PM IST

டெல்லி: குரங்கம்மை  தொற்று உலகளவில் தற்போது அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் சீரம் இந்தியா நிறுவனம்  இறங்கியுள்ளதாக  தகவல் வெளியிட்டுள்ளது.


2022ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான, காங்கோ நாட்டில்தான் முதலில் குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோயாகும். இந்நோய் எம்பாக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக  இந்த நோயின் பாதிப்பு ஆரம்பத்தில் லேசாக ஆரம்பித்து இறுதியில் உயிரை பறிக்கும் தன்மையுடன் இருந்து வருகிறது. இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.


குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படுமாம். அதன்பின்னர் உடலில் தடிப்புகள் ஏற்பட்டு உடல் முழுவதும் கொப்புளம் கொப்புளமாக தோன்றுகிறது. இந்த கொப்புளம் தலையில் இருந்து உள்ளங்கால் வரை பரவும் தன்மை உடையது. தலைவலி, தசை வலி, உடல் சோர்வு, தொண்டை வலி மற்றும் இறுமல் இருக்குமாம்.




இந்த நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் இதை சமாளிக்க ஆயத்தமாகுமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நோய்த் தடுப்பு தொடர்பான ஆய்வுகள், நிதி ஒதுக்கீடுகள், சிகிச்சை முறைகள், நாடுகளிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்குமாறும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. காங்கோவில் தொடங்கி தற்போது புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் பரவி வருகிறது. 


சர்வதேச அளவில் நாடுகள் இணைந்து இதற்கு எதிராக செயல்படும்போது இந்த நோய்ப் பரவலைத் தடுக்க முடியும், பல உயிர்களைக் காக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதனாம் கெப்ரியேசிஸ் கூறியுள்ளார்.


ஆப்பிரிக்க கண்டத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிர் இழந்துள்ளனர்.  தற்போதைய நிலவரப்படி மொத்தம் 13 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நோயினால் இந்தியாவில் இதுவரைக்கும் 4 பேர் பதிக்கப்பட்டுள்ளனர்.


உலகம் முழுவதும் பரவி வரும் இந்நோய்க்கு சீரம் நிறுவனம் தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைமை நிர்வாகி கூறுகையில், "குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவி உள்ளது. நாட்டு மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் முயற்சியில் தடுப்பூசி உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் " என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்