வசீகரிக்கும் அழகு.. அன்பு.. ஏன் வந்தது  "உலகஅழகு தினம்"?

Su.tha Arivalagan
Sep 09, 2023,01:01 PM IST
சென்னை: இன்று உலக அழகு தினம்.. அடடே.. இதுக்கெல்லாம் ஒரு தினமா என்று உடனே உங்க மனசுல ஒரு ஆச்சரியம் ஓடுச்சா.. அப்படின்னா.. வாங்க வாசிக்கலாம் அதைப் பத்தி.

உலக அழகு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சரி ஏன் இப்படி ஒரு தினம்.. யார் இதை ஆரம்பிச்சாங்க?

1995ம் ஆண்டு தான் இந்த தினம் பிறந்தது. சர்வதேச அழகியல் மற்றும் அழகுசான கமிட்டி என்ற அமைப்புதான் இந்த தினத்தை உருவாக்கியது. உண்மையில் அழகு என்பது என்ன.. அதை நாம் எப்படி கொண்டாட வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த உலக அழகு தினம் கொண்டு வரப்பட்டது.





அழகு என்பதன் இலக்கணம் காலத்திற்கு காலம் மாறிக் கொண்டேதான் வருகிறது. முன்பொரு காலத்தில் சிவந்த மேனிதான் அழகு என்று பாராட்டப்பட்டது, போற்றப்பட்டது, கொண்டாடப்பட்டது. இன்று கருத்த நிறமும் கொள்ளை அழகுதான் என்று மக்கள் மனதில் மாற்றம் வந்து விட்டது. இன்றைய சூழலில் எல்லாமே அழகுதான்.. எல்லா அழகுமே சமம்தான் என்ற சமத்துவம் வந்து விட்டது. ஏன் கருத்த மேனி கொண்ட அழகியர் பலர் உலக அழகிகளாகவே தேர்ந்தெடுக்கப்படுவதையும் நாம் கண்டு வருகிறோம்.

புற அழகு மட்டுமல்லாமல் அக அழகுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியதையும் கொண்டாடும் வகையில்தான் இந்த அழகு தினம் உருவாக்கப்பட்டது. இந்த தினத்தன்று அழகுத் துறையில் குறிப்பாக காஸ்மெட்டிக்ஸ், பியூட்டி பார்லர் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அழகுக் கலை நிபுனர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு அவர்கள் பாராட்டப்படுகிறார்கள், கவனிக்கப்படுகிறார்கள்.

பண்டைய காலத்தில் அழகான பெண்கள் என்றால், வலுவான உடல், வசீகரிக்கும் முகம், நீண்ட கூந்தல், கருப்பான புருவங்கள் , ஆரோக்கியம் இவை அனைத்தும் கொண்டவர்களாக கருதப்பட்டனர். இந்தக் கண்ணோட்டம் போகப் போக மாறியது. இக்காலத்தில் மெல்லிய உடலமைப்பு, நீளமான கழுத்து, நல்ல உயரம், சிவந்த முகம், பொன்னிறமான அலை அலையான முடி  ஆகியவற்றை கொண்டவர்களும் கூட அழகானவர்களாக கருதப்படுகின்றனர்.



அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப மனத்தூய்மை, அன்பு, அடக்கமான குணம் போன்ற பண்புகளை உடையவர்கள்  அழகானவர்கள் என நம் முன்னோர்கள் கூறினர். ஆனால் பின்னாளில் அதிலும் மாற்றம் வந்தது, ஏற்றத்தாழ்வுகள் பிறந்தன.. அதையெல்லாம் உடைக்கத்தான் இந்த அழகு தினம் கொண்டு வரப்பட்டது. அனைவருமே அழகானவர்கள்தான், அனைத்துமே அழகுதான் என்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

1995ம் ஆண்டு பிறந்த இந்த உலக அழகு தினமானது, 1999ம் ஆண்டு முதல் இந்தியாவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அழகு தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நிற பேதம் பார்க்காமல்.. அகத்தின் அழகையும் மதித்து போற்றினால்.. எல்லோரும் அழகானவர்களே!