மக்களே இதை நோட் பண்ணுங்க.. செப்டம்பர் 30ம் தேதியோடு ரூ. 2000 கடைசி!
சென்னை: அன்பார்ந்த பெரியோர்களே... தாய்மார்களே.. செப்டம்பர் 30ம் தேதியோடு 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலே அரசு பேருந்துகள், பெட்ரோல் பங்குகளில் ரூ. 2000 நோட்டுக்களை வாங்குவதை நிறுத்தி விட்டனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து அறிவித்தபோது புதிதாக ரூ. 2000 ரூபாய் நோட்டு அறிமுகமானது. ஆனால் காலப் போக்கில் அது அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது. புழக்கத்தில் உள்ள நோட்டுக்கள் மட்டுமே சுற்றி வந்தன. புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களையும் வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் ஒப்படைக்க செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசமும் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிய இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை அரசு பஸ்கள், பெட்ரோல் பங்குகள் நிறுத்தியுள்ளன.
தொடர் விடுமுறைகளால் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பயணிகளிடமிருந்து ரூ. 2000 நோட்டுக்களைப் பெற வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல பெட்ரோல் பல்க், சூப்பர் மார்க்கெட், பஜார் போன்ற இடங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
2000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் அதிக புழக்கத்தில் இருந்தது. பின்னர் அது குறைந்து விட்டது. ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்தே நீக்குவதாக அறிவித்தது. மக்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறவும் முடிவு செய்து அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.