மீண்டும் சிறையில் செந்தில் பாலாஜி.. 16ம் தேதி ஜாமீன் கோரி மனு

Su.tha Arivalagan
Aug 12, 2023,04:10 PM IST
சென்னை: அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கோரி ஆகஸ்ட் 16ம் தேதி மனு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அவரது கைது செல்லும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை கஸ்டடிக்கும் அது அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை செஷன்ஸ் கோர்ட், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடிக்கு அனுமதி அளித்தது. அதன் பேரில் செந்தில் பாலாஜியைக் கஸ்டடியில் எடுத்த அமலாக்கத்துறை அவரை கடந்த 5 நாட்களாக விசாரித்து வந்தது.

விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து இன்று அவர் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 25ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி மீது இன்று ஒரு குற்றப் பத்திரிக்கையும் பதிவு செய்யப்பட்டது. அதில் அவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியை ஜாமீனில் எடுக்க ஆகஸ்ட் 16ம் தேதி மனு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.