அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் - 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பு

Su.tha Arivalagan
Jul 14, 2023,04:04 PM IST

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தது செல்லும் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை சென்னை அரசினர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஹைகோர்ட் உத்தரவின்படி அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.


இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. இதையடுத்து 3வது நீதிபதி விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வழக்கை விசாரித்தார். விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பை அளித்தார்.


இந்த தீர்ப்பின்போது, 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்புடன் தான் ஒத்துப் போவதாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்தார். அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியைக் கைது செய்தது செல்லும். அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம். விசாரணைக்கு கைது செய்யப்பட்டவர் தடை கோர முடியாது. மாறாக, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க சட்டத்தில் பல வழிகள் உண்டு. அதை அவர்கள் செய்ய வேண்டும். மாறாக விசாரணையே கூடாது என்று கூற முடியாது என்றும் நீதிபதி கார்த்திகேயன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.


இந்தத் தீர்ப்பு காரணமாக செந்தில் பாலாஜி தரப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.