பொங்கலை வீட்டில் கொண்டாட முடியுமா.. ஜாமீன் கிடைக்குமா.. செந்தில் பாலாஜி வழக்கில்.. ஜன.12ல் தீர்ப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஜனவரி 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யும் போதே செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. கோர்ட் உத்தரவின்படி அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு அவருடைய உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் பல முறை ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி. அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த மனு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வருவதற்காக விசாரணை சிறிது நேரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அமலாக்க துறை சார்பில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டால் சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளதாக கூறி வாதிட்டனர். இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் 180 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் அவர் உடல்நிலை மெதுவாகத்தான் சீராகி வருகிறது.
மேலும், சாட்சிகள் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சாட்சியங்களை அழிப்பதற்கு வாய்ப்பில்லை. அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்று என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டிருந்த நீதிபதி அல்லி, இந்த வழக்கில் தீர்ப்பு வரும் ஜனவரி 12-ம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.