50 ஆண்டு கால வரலாற்றில் நாளை புதிய வரலாறு, உதயநிதிக்கு வாழ்த்துகள்.. பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்

Su.tha Arivalagan
Sep 28, 2024,04:49 PM IST

சென்னை:   தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நாளை புதிய வரலாறு ஒன்று படைக்கப்படவுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் போட்டுள்ள எக்ஸ் பதிவு கவனம் ஈர்த்துள்ளது.


முக்கியமாக, நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளதாகவும் லட்சுமணன் தெரிவித்துள்ளார். உண்மையில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவை மாற்றம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதை விட முக்கியமாக, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவாரா, எப்போது ஆவார், என்ன துறை அவருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான் பெரும் பேசு பொருளாக இருந்து வந்தது.


இப்போது ஆவார், இதோ ஆகப் போகிறார், முதல்வர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு ஆவார் என்றெல்லாம் அடிக்கடி வந்த வதந்திகளால் உதயநிதி ஸ்டாலினே கூட அட போங்கப்பா என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு ஆகி விட்டது. ஆனால் நாளை இது நடைபெறப் போவதாக மூத்த பத்திரிகையாளரான எஸ்.பி.லட்சுமன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள இரு எக்ஸ் பதிவுகள்:




பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30 க்கு அரங்கேற இருக்கிறது.  மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராவதில் ஆச்சரியமில்லை. 


ஆனால் கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். நிஜமாகவே சமூக நீதியை வலுப்படுத்தும் ஏற்பாடு இது.  இந்தப் புரட்சிக்கு சமீப பத்தாண்டுகளில் வித்திட்டவர், மறைந்த ஜெயலலிதாதான். பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பள்ளிக்கல்வி அமைச்சராக்கியவர் அவர். 


சிறுபான்மை சமூகத்தவர் கவலைப்பட ஒன்றுமில்லை. ஒருவர் போய் ஒருவர் வருகிறார். பால் வளம் கைமாறுகிறது. சுற்றுச்சூழல் இன்னொருவருக்கு கூடுதலாகப் போகிறது. 


புதியவர்களுக்கு வாழ்த்துகள்


நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது.


உதயநிதிக்கு கூடுதலாக எந்தெந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படும்…?இதற்காக துறைகளை இழக்கப்போகும் சீனியர்கள் யார் யார்..? என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக வதந்திகள், கேள்விகள் உலா வந்தன.


சீனியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். “அப்படி யாருடைய துறையையும் பறித்து எனக்கு கூடுதலாக எந்தத் துறையும் வேண்டாம். இப்போதிருக்கும் விளையாட்டுத் துறையே போதும்” என்று சொல்லிவிட்டார் உதயநிதி.


வாரிசு என்பதால் ஆணவத்தையோ, அதிகார மமதையையோ காட்டாமல் தன்னடக்கத்தோடு உழைத்தால் தமிழக மக்கள் ரசிக்கவே செய்வார்கள். அந்தத் தடத்திலேயே பயணிக்க விரும்பும் உதயநிதிக்கு வாழ்த்துகள். 


ஆனாலும், முதல்வர் தன் வசம் இப்போது வைத்துள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையை உதயநிதிக்கு கூடுதலாகத் தர இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள நல்ல துறை. இதே தன்னடக்கத்தோடு, கூடுதல் உழைப்போடு புதிய பதவியைத் தொடர மீண்டும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார் எஸ்.பி.லட்சுமணன்.


இந்த முறையாவது அமைச்சரவை மாற்றம் நடக்குமா, உதயநிதி நாளை துணை முதல்வராவாரா என்பதை காத்திருந்து பார்ப்போம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்