ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா.. அல்லது திருமா அணி மாறுவாரா?.. தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
சென்னை: ஆதவ் அர்ஜுன் ஆறு மாதத்திற்கு இடை நீக்கம். அண்ணன் திருமா அறிவிப்பு. ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா... அல்லது திருமா அணி மாறுவாரா... என்று பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 6ம் தேதி சென்னையில் ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு சார்பில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியீட்டார்.
இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பேசியிருந்தார். ஆதவ் அர்ஜூனா திமுகவினரை நேரடியாக தாக்கி பேசியது, அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கொந்தளிக்கச் செய்தது. அத்துடன் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் ஆதவ் அர்ஜூனாவை தற்காலிக நீக்கம் செய்து நேற்று திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து, தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீங்கிக் கொள்வதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆதவ் அர்ஜுன் ஆறு மாதத்திற்கு இடை நீக்கம்... அண்ணன் திருமா அறிவிப்பு.. ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா... அல்லது திருமா அணி மாறுவாரா...இந்த இடைநீக்கம் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த சஸ்பென்ஸை யார் உடைப்பார்கள்? என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்