முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கண்டு திருமாவளவன் பயப்படுகிறார்.. டாக்டர் தமிழிசை சொல்கிறார்!

Meenakshi
Dec 06, 2024,04:39 PM IST

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பயந்து தான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க மறுக்கிறார். இன்று திருமாவளவன் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய கரும்புள்ளி. அம்பேத்கருக்கு சிறப்பு செய்கிறாரா இல்லை கூட்டணிக்கு சிறப்பு செய்கிறாரா என்று தெரியவில்லை என்று பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.


தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்யுடன் ஒரே மேடையில் ஏறுவதை தான் ஏன் தவிர்த்தேன் என்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் விரிவான விளக்கம் அளித்துள்ள நிலையில், திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டு பயப்படுகிறாரா என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இது குறித்து தமிழிசை செளந்தர்ராஜன் பேசுகையில், தமிழகத்தில் அம்பேத்கர் அவர்கள் ஒரு கூட்டணி பேசு பொருளாக ஆகியிருக்கிறார் என்பது தான் நமக்கு ஒரு மிகுந்த வேதனை. திருமாவளவன்  அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மறுப்பதை விட அதற்கு ஒரு விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். எது எப்படியாயினும் துணிச்சலாக நான் அம்பேத்கர்  அவர்களின் புகழைப் பாடுவேன் என்பது தான் இவர்கள் அம்பேத்கர் பெயரை சொல்வதற்கு தகுதியானவர்கள். திருமாவளவன் பலவீனமானவரா? அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதை விட விஜய் இவரை பயமுறுத்துகிறாரா? 


ராஜ்நாத் சிங் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் நாணயத்தை வெளியிட வந்தார். கூட்டணி பற்றி எல்லாம் சிந்திக்கவில்லை. எதிர்கட்சி கூட்டணியாக இருந்தாலும் தலைவர் யார் என்று தான் சிந்தித்தார். அதே போல திருமாவளவன் அவர்கள் தலைவர் யார் என்று சிந்தித்திருந்தால் சரியாக இருக்கும். பிரதமர் அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்தாலும் பரவாயில்லை என்று ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்தார். இன்று திருமாவளவன் அவர்கள் திராவிட முன்னேற்ற கூட்டணியில் குழப்பம் வந்து விடும் என்று அம்பேத்கரின் புகழைப்பாடுவதைக் கூட மறுக்கிறார்.


ஸ்டாலின் அவர்கள் நீங்கள் போயிட்டு வாங்கனு சொல்லுற அளவிற்கு பெரும்பான்மையாக இருந்திருந்தால் அவரது பரந்த மனப்பான்மையை தெரிந்திருக்கலாம். திருமாவளவனும், ஸ்டாலின் அவர்களும் அம்பேத்கர் மீது மரியாதை வைத்திருக்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.


எதுக்கெடுத்தாலும் ஓட்டு வங்கிக்குள் தான் இவர்கள் சுருங்கி விடுவார்கள் என்பதை காண்பித்து விட்டார்கள். ஒரு கருவியாக பயன்படுத்தும் அளவிற்கு திருமாவளவன் பலவீனமானவராக இருக்கிறாரா? இரும்பாக நின்று அவரது புகழைப் பாடியிக்க வேண்டாமா. இன்று திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கரும்பள்ளி.  அவர் அம்பேத்கரை சிறப்பிக்கிறாரா அல்லது கூட்டணியை சிறப்பிக்கிறாரா? ஸ்டாலின் திருமாவளவனை அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஸ்டாலினுக்கு பயந்து தான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க மறுக்கிறார். இருவருமே தவறு இழைத்தவர்கள் தான். அம்பேத்கர் அவர்களை ஒரு தலைவராக தான் பார்க்க வேண்டும் கூட்டணியாக பார்க்கக் கூடாது என்று கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்