செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் பெண் குழந்தைக்கு கணக்கு உள்ளதா.. அப்ப இதை படிங்க முதல்ல!

Manjula Devi
Oct 08, 2024,01:44 PM IST

டெல்லி:   பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடர்பான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.


சுகன்யா சம்ருதி யோஜனா என அழைக்கக்கூடிய செல்வமகள் சேமிப்பு திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இந்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். இதில் பெண் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான வைப்பு நிதியை பெறப்படும் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. 




அதாவது பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலாரோ குறைந்தபட்சமாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகம் அல்லது வங்கிகளில் செல்வமகள் சேமிப்பு திட்டம் கணக்கை தொடங்கலாம். அதிகபட்சமாக 15 ஆயிரம் வரை வைப்புத் தொகையாக செலுத்தலாம். இந்தத் தொகை ஒவ்வொரு நிதி ஆண்டிலும் செலுத்தப்பட வேண்டும். தொடர்ந்து 14 ஆண்டுகள் பெண்ணுக்கு திருமணமாகும் வரை செலுத்த வேண்டும்.பின்னர்  21 ஆண்டுகள் இறுதியில் வட்டியுடன் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதில் ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 


குறிப்பாக இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு கணக்கை தொடங்கலாம். இந்த நிலையில் சுகன்யா சம்ரிதி யோஜனா சேமிப்பு திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் ஆதார் அல்லது பான் விவரங்களை குழந்தையின் கணக்குடன் இணைக்க வேண்டும். 


தாத்தா அல்லது பாட்டி பேத்திக்காக கணக்கு தொடங்கி இருந்தால் அது குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும். இந்த விதி அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிகளை பின்பற்ற தவறினால் கணக்கு நிரந்தரமாக மூடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்