ஜெயிலருக்கு ஏன் கட்டுப்பாடு போடலை.. லியோவை மட்டும் குறி வைப்பது ஏன்?.. சீமான் கேள்வி
Oct 14, 2023,09:02 PM IST
- மஞ்சுளா தேவி
சென்னை: ஜெயிலர் படத்துக்கு எந்த நெருக்கடியும் தரவில்லை. விஜய்யின் முந்தைய படங்களுக்கும் இதுபோல நெருக்கடி கொடுக்கவில்லை. இப்போது லியோவை மட்டும் குறி வைத்து இப்படி நெருக்கடி தர என்ன காரணம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுள்ளார்.
லியோ படத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. லியோ படம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் இருந்து வந்தன. அந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு திடீரென ரத்து செய்யப்பட்டு மேலும் சர்ச்சையை அதிகரித்தது.
இந்த நிலையில் லியோ பட ரிலீஸ் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திரையுலகிலிருந்து யாரும் எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதுகுறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், விஜய் படங்கள் பல வெளியானபோது இதுபோல நெருக்கடி தரப்படவில்லை. ஏன். சமீபத்தில் வந்த ஜெயிலர் படத்துக்கு இதுபோல ஏதாவது சொன்னார்களா இல்லை. இந்தப் படத்துக்கு மட்டும் ஏன்.
விஜய் படத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்று சொல்வதே ஒரு அரசியல்தான். தியேட்டர்களில் காவலர்களைப் போட்டு கண்காணிப்போம் என்று சொல்வது ஏன் என்று புரியவில்லை. இது நெருக்கடியைத் தர முயற்சிக்கிறார்கள். தியேட்டர் முன்பு பத்து போலீஸ்காரர்களைப் போட்டால் ரசிகர்கள் என்ன நினைப்பார்கள். அவர்களை அச்சுறுத்தும் முயற்சி இது.
ஆடியோ லானச் நடத்த விடவில்லை. வெளிப்படையாகவே தெரியுது அவரை தொந்தரவு செய்கிறீர்கள் என்று. அதில் அரசியல் இல்லை என்று சொல்வதே அரசியல் தான். இதற்கு முன்னாடி விஜய் படத்திற்கு இவ்வளவு நெருக்கடியை பார்க்கவில்லையே. இதுக்கு முன்னால் மெர்சல், மாஸ்டர் படம் வந்துச்சு. இதுக்கெல்லாம் நெருக்கடி கொடுக்கவில்லையே.
காலை 9 மணிக்கு எல்லாம் ஆரம்பித்து, இரவு 1:30க்கு எல்லாம் முடித்துவிட வேண்டும் என்று சொல்வது ஏன். அவர் அரசியலுக்கு வருவதால் ஏன் அவர் படத்திற்கு இப்படி செய்கிறீர்களா என்றார் சீமான்.