மும்பையை அதிர வைத்த பாபா சித்திக் படுகொலை.. சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Su.tha Arivalagan
Oct 13, 2024,02:58 PM IST

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவை அதிர வைத்துள்ளது. பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இதற்குப் பொறுப்பேற்றுள்ளது. இதே கும்பல் ஏற்கனவே சல்மான் கானுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதால் அவரது வீட்டுக்கு தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


மும்பையில் உள்ள பல்வேறு பிரபலங்களுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருபவர் கேங்ஸ்டர் பிஷ்னோய். இவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு படுகொலைகளைச் செய்துள்ளனர். பலரை மிரட்டிப் பணம் பறித்துள்ளனர். இவர்களைப் பகைத்துக் கொண்டால் வாழவே முடியாது என்ற அளவுக்கு கொடூரமாக செயல்படக் கூடியவர்கள் இந்தக் கும்பல்.




சல்மான் கான், ஷாருக் கான் போன்ற பிரபல நடிகர்களையும் இந்தக் கும்பல் தொடர்ந்து மிரட்டி வருகிறது. சல்மான் கானுக்குத்தான் இதில் அதிக அளவில் மிரட்டல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக சல்மான் கானும் பலமுறை காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை இந்தக் கும்பல் சுட்டுக் கொன்றுள்ளது. இத்தனைக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பில் இருந்தவர் பாபா சித்திக் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மும்பையைச் சேர்ந்த பல்வேறு விஐபிக்களும், திரையுலகினரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பலத்த போலீஸ் பாதுகாப்பில் இருந்த ஒருவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அப்பாவி மக்களின் கதி என்ன என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்துறை அமைச்சகத்தை கையில் வைத்திருக்கும் துணை முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


இந்த நிலையில்,  நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிஷ்னோய் கும்பலால் சல்மான் கானுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. சல்மான் கான் வசிக்கும் காலக்ஸி அபார்ட்மென்ட் வீட்டுக்கு வெளியே போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.


கொல்லப்பட்ட பாபா சித்திக், அஜீத் பவார் தலைமையிலான  தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். நேற்று இரவு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  தகவல் கிடைத்ததும் சல்மான் கான், விரைந்து சென்று பாபா சித்திக் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 


சல்மான் கானுக்கு குறி?




பிஷ்னோய் கும்பல் நீண்ட காலமாகவே சல்மான் கானுக்குக் குறி வைத்து வருகிறது. அவருக்கு மிகப் பெரிய அளவிலான மிரட்டலை இந்தக் கும்பல் கொடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி சல்மான் கானின் பந்த்ரா வீட்டுக்கு வெளியே இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய  அந்த இரு நபர்களையும் பின்னர் குஜராத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.


இதையடுத்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தற்போது இந்தக் கும்பல் முன்னாள் அமைச்சரைக் கொலை செய்ததைத் தொடர்ந்து சல்மான் கானுக்கான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.


ஷாருக் கான் - சல்மான் கானை சேர்த்து வைத்தவர்




பாபா சித்திக், சல்மான் கான் மற்றும் ஷாருக் கானுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். சல்மானும், ஷாருக்கும் ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக இருந்தனர். இருவருக்கும் இடையே ஒரு வகையான போட்டியும், பகைமையும் இருந்து வந்தது. இந்த பஞ்சாயத்தை சரி செய்து இருவரையும் நண்பர்களாக்கியவர் பாபா சித்திக்தான்.


இருவரும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் பாலிவுட்டில் இந்த இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்தது. ரசிகர்களும் அமைதியானார்கள். அப்போது முதலே இருவரின் அன்பையும் சம்பாதித்து வைத்திருந்தார் பாபா சித்திக். தற்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பதால் சல்மான் கானும், ஷாருக் கானும் பெரும் வேதனையும், அதிருப்தியும் அடைந்துள்ளனராம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்