76வது குடியரசு தின விழா.. தமிழ்நாடு முழுவதும் பல மடங்கு பாதுகாப்பு.. மாநில எல்லைகளில் தீவிர சோதனை!

Manjula Devi
Jan 25, 2025,07:04 PM IST

சென்னை: 76 ஆவது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியான நாளை ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. குடியரசு மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை தேசிய கொடியை ஏற்ற உள்ளார். தொடர்ந்து உரை நிகழ்த்துவார். 


நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம், ராணுவ வலிமை போன்றவற்றை காட்சியப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலத்தின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், நட்சத்திர விடுதிகள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 




அதேபோல் மாநில எல்லைகளிலும் வரும் வாகனங்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது. 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல குடியரசு தின விழா நடைபெறும் பகுதியில், ஐந்தடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.


மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தனியார் விடுதிகள் என கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. சென்னை கடலோரப் பகுதிகளில் அதிகாரிகள் வெடி குண்டு சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு அடையாளம் தெரியாத சந்தேகத்திற்குரிய நபர்கள் சுற்றி திரிந்தால் அவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களிடமிருந்து பெறப்படும் அடையாள அட்டைகளை சேதனையிட்ட பின்னரே விடுவிக்கின்றனர்.


கடந்த இருபதாம் தேதி முதல் சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் பாதுகாப்பின் தீவிரம் அதிகரிக்கப்பட்டு ஏழடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. 


இங்கு தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு படையினர், உளவுத்துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என பல தரப்பினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஏழு அடுக்கு பாதுகாப்பு ஜனவரி 27ஆம் தேதி நள்ளிரவு வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்