நொய்டாவில் 144 தடை உத்தரவு.. மத ரீதியான நிகழ்வுகளுக்கு தடை

Aadmika
Sep 06, 2023,03:48 PM IST
நொய்டா : நொய்டாவில் செப்டம்பர் 06 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

போலீசார் வெளியிட்டுள்ள உத்தரவின் படி, கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 12 ல் துரோனாச்சாரியார் மேளா நடக்க உள்ளது. அதோடு சில போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளன. விவசாயிகளின் முக்கிய கூட்டம் செப்டம்பர் 15 ம் தேதி நடத்தப்பட உள்ளது. 
இதேபோல டெல்லியில் ஜி20 மாநாடும் நடைபெறவுள்ளது. 



பல்வேறு அரசியல் கட்சிகள், இந்திய விவசாயிகள் சங்கத்தினர், பல்வேறு போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருவுதால் தற்போதுள்ள அமைதியான நிலை பாதிக்கப்படும். இதனால் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும், வேண்டாத நிகழ்வுகள் நடப்பதை தடுப்பதும் அவசியமாகும். 

இதனால் பூஜைகள், நமாஸ், ஊர்வலம் அல்லது மற்ற மத ரீதியான நிகழ்வுகளை பொது இடங்களில் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. பொது போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கும், போலீசார் அனுமதி இல்லாமல் ஒரே இடத்தில் குழுவாக சேர்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களைச் சுற்றி டிரோன் கேமிராக்கள் மூலம் வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் அதிகமானவர்கள் கூடுவதற்கும், சத்தமான ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை அந்த மாநில அரசு பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.