தலைமைச் செயலகத்தில் அதிர்வு?.. ஊழியர்கள் பதட்டம்.. கட்டடம் நன்றாக உள்ளது.. அமைச்சர் எ.வ.வேலு

Manjula Devi
Oct 24, 2024,01:56 PM IST

சென்னை: சென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென  கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ஆனால் கட்டடம் நன்றாகவே உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு விளக்கம் அளித்துள்ளார்.


சென்னை தலைமை செயலகம், 10 மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் தமிழ்நாடு அரசின் அனைத்து  துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அரசு ஊழியர்கள் 1500 க்கும் மேற்பட்டோர்  பணிபுரிந்து வருகின்றனர்.




இந்த நிலையில் இன்று காலை ஊழியர்கள் வழக்கம் போல பணிக்கு வந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்த நிலையில் திடீரென சிலர் அதிர்வை உணர்ந்ததாக தெரிகிறது. இதையடுத்து நில அதிர்ச்சி ஏற்பட்டு விட்டதோ என்று பதட்டமடைந்து ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடியுள்ளனர். கட்டடம் நடுங்கியதாகவும் சிலர் கூறவே மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 


இதுகுறித்து தலைமைச் செயலக ஊழியர்கள் சிலர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அலுவலக அறை ஒன்றில் தரையில் உள்ள டைல்சில் கிராக் ஏற்பட்டு சத்தம் கேட்டது. இதனால் நில அதிர்வு ஏற்பட்டதாக நாங்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தோம் என கூறினார். 


விரைந்து வந்த போலீசார் கட்டிடத்திற்குள் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர். பொதுப்பணித்துறை பொறியாளர்களும் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் டைல்ஸில் ஏற்பட்ட விரிசலைத்தான் சிலர் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டதாக தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் ஒலிபெருக்கி மூலம் ஊழியர்களின் பயத்தைப் போக்கும் வகையில் பேசினர். வதந்திகளை நம்ப வேண்டாம். இது பொய்யான தகவல். நாங்களும் உங்களோடு தான் நிற்கிறோம். கட்டடம் உறுதித் தன்மையோடு இருக்கிறது. தயவு செய்து பணியை தொடருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்கள். அதன் பின்னர் ஊழியர்கள் பயம் நீங்கி அலுவலகத்திற்குள் சென்றனர்.


அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்


பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து விரிசல் விட்டிருந்த டைல்ஸைப் பார்வையிட்டார். பொறியாளர்களிடமும் கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கட்டடம் உறுதித் தன்மை  குறையவில்லை. கட்டிடம் உறுதியாக உள்ளது. அச்சப்பட வேண்டாம். ஏர் கிராக்தான் ஏற்பட்டுள்ளது. அது இயல்பானதுதான். இதை சிலர் தவறாக பரப்பி விட்டனர்.


14 வருடத்திற்கு முன்பு போடப்பட்டது என்பதால் டைல்ஸில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை மாற்றி விட்டு புதிய டைல்ஸ்  சில நாட்களுக்குள் போடப்படும் என்று விளக்கம் அளித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்