செம மழை வரப் போகுது.. முன்னெச்சரிக்கையாக.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை லீவு!

Meenakshi
Nov 24, 2023,05:17 PM IST

சென்னை: கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கை காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில்  நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அனைத்துப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர்கள், சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். 


முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 27ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 29ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.




கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  

அதேபோல 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில்தான் தற்போது நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை காலை முதல் வெயில் அடித்து வந்தது. மாலைக்கு மேல் நிலைமை மாறியுள்ளது. நாளை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.