"கண்டிப்பா நீங்களும் கலெக்டர் ஆக முடியும்".. சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் நம்பிக்கை பேச்சு!
சிவகங்கை: இளம் வயதிலேயே பொது அறிவை வளர்த்துக் கொண்டால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது என்று பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜீத்.
முன்பெல்லாம் கலெக்டர் என்றால் அரிதாக பார்க்கப்படுபவராக மட்டும் தான் இருந்தார். கலெக்டரை காண்பதெல்லாம் குதிரைக்கொம்பாக இருந்த நிலை தற்பொழுது மாறியுள்ளது. கலெக்டர் என்பவர் முன்பு போல் இல்லாமல் களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்வதுடன் பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் அளவிற்கு இயல்பாரவராகி விட்டார்கள்.
அப்படித் தான் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளிக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் நேரில் வருகை தந்து, மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். அதுவும் தான் எவ்வாறு கலெக்டர் ஆனேன் என்பதை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி ஊக்கம் கொடுத்தார்.
மாணவர்களிடையே பேசிய கலெக்டர் ஆஷா அஜீத் கூறியதாவது:
இளம் வயதிலேயே மாணவர்கள் பொது அறிவை அதிகம் வளர்த்துக் கொண்டால் மிக எளிதாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம். நான் இரண்டு ஆண்டுகள் தொடர் முயற்சி எடுத்து படித்து போட்டி தேர்வில் வெற்றி பெற்றேன். ஐஏஎஸ் ஆன பின்பு சமுதாயத்தில் பல்வேறு நல்ல விஷயங்களை செய்வதற்கு வாய்ப்புக்கள் கிடைத்துள்ளது.
தேவகோட்டை சார் ஆட்சியராக இருந்தபோது இப்பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன். ஆறு வருடங்களுக்கு முன்பாக நான் பங்கேற்றபோது மாணவர்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக இருந்தது. தொடர்ந்து இப்பள்ளி ஆறு வருடங்களாக அதேபோன்று இப்போதும் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்துடன் செயல்படுவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களும் , மாணவர்களாகிய நீங்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் அரசாங்கத்தின் பல்வேறு செயல்பாடுகளை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்றார் கலெக்டர் ஆஷா அஜீத்.
மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார் கலெக்டர். மாவட்ட ஆட்சியரின் பேச்சினை கேட்டு சிறப்பாக பின்னூட்டம் வழங்கிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம், தேவக்கோடை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில்குமரன், தேவகோட்டை வட்டாட்சியர் அசோக்குமார் , வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமிதேவி, மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.