வலது கையை வச்சு.. இடது காதை தொடணும்.. மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.. மனதை அள்ளும் நினைவுகள்!
- பொன் லட்சுமி
பிளஸ்டூ ரிசல்ட் வந்தாச்சு.. பள்ளிக்கூடத்திற்கும், பிளஸ்டூவை முடித்த மாணவர்களுக்குமான உறவு முடிவுக்கு வந்து விட்டது.. அப்பாடா இனி ஸ்கூலுக்குப் போக வேண்டாம் என்று மனசு பலருக்கும் உற்சாகத்தில் துள்ளும்.. ஆனால் அவர்கள் சற்றே திரும்பிப் பார்த்தால் கடந்து வந்த இந்த 12 வருஷத்துக்கும் ஈடான நாட்களை அவர்களது வாழ்க்கையில் இனி ஒரு போதும் பெற முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
பள்ளிக்கூட காலம்தான்.. அழகான பொற்காலம்னு சொன்னா மிகையே இல்லைங்க. 80 ஸ்,90 ஸ் காலகட்டத்தில் பிறந்த அத்தனை ஆண்களும் பெண்களும் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம், ஏன்டா நாம வளர்ந்தோம்னு நிச்சயம் ஒருமுறையாவது நினைச்சு பார்த்திருப்போம் ... வாழும்போதே சொர்க்கத்தை அனுபவித்தவர்களில் நாமும் ஒருவராக இருப்போம்.
இன்றும் நன்றாக நினைவிருக்கிறது அந்தப் பள்ளி செல்லும் காலங்கள்.. அதிலும் ஒன்றில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை செல்லும் நாட்கள் தான் நம் வாழ்வில் மறக்க முடியாத சந்தோசங்களை அள்ளித் தந்த நாட்கள்... இன்று கோடி ரூபாய் கொடுத்தா கூட அந்த நாட்கள் இனி திரும்ப கிடைக்காதுனு நினைக்கும்போது மனசு வலிப்பதைத் தடுக்க முடியாது.. அந்த நாட்கள் இனி எப்போதுமே திரும்ப வராது .. அது விட்டு சென்ற நினைவுகள் எப்போதுமே மனதை விட்டு அழியாது..
சின்ன வயசுல தாத்தா பாட்டி வந்து நாங்கலாம் அந்த காலத்துலனு ஆரம்பிக்கும் போது "ஆரம்பிச்சுட்டாங்கய்யா இவங்களுக்கு வேற வேலை இல்ல"ன்னுட்டு சொல்லுவோம்.. ஆனா இப்பதான் புரியுது அந்த காலத்தோட சந்தோசம் என்னன்னு.. ஒண்ணாம் கிளாசுக்கு பெயர் சேர்க்க போகும்போது இப்போ இருக்கிற மாதிரியெல்லாம் மூணு வயசு ஆனதும் குழந்தைகளை ஸ்கூல்ல கொண்டு போய் சேர்க்க மாட்டாங்க. அஞ்சு வயசு முடிஞ்சு ஆறு வயசு பிறந்ததும்தான் போவாங்க.. அதிலும் ஸ்கூலில் வாத்தியார் பிள்ளையோட வலது கையை வச்சி இடது காதை தொடணும்னு சொல்வார்.. அப்படி தொட்டா தான் ஸ்கூல்ல சேர்த்துப்பாங்க..
ஒண்ணாம் கிளாஸ்ல முதல்ல ஆனா ஆவன்னா மட்டும்தான் சொல்லி தருவாங்க .. ஒன்னா கிளாஸ் தமிழ் புக்குல படகு செய்வோம்னு ஒரு பாடம் இருக்கும். தவளை, எலி, கோழி குஞ்சு, எறும்பு, வண்டு எல்லாரும் ஒண்ணா சேர்ந்து படகு செய்வாங்க. அந்தப் பாடம் இன்னும் மனசுக்குள்ளேயே இருக்குது.. அப்புறம் மூணாம் கிளாஸ் வந்த அப்புறம்தான் இங்கிலீஷ், வாய்ப்பாடுனு எல்லாம் வரும்.. மூணாம் கிளாஸ் தமிழ் புக்குல வனத்திலே ஒரு விழா, முதலையா நரியா, இரவில் ஊர் உலா, அறிவால் வெல்லுவேன் பாடத்தில அழகுமலைக்குச் செல்வேன் ஆடி பாடி துள்ளுவேன் அப்படின்னு ஒரு பாட்டு வரும். அந்த பாட்டு அவ்வளோ பிடிக்கும்.. காரணம் அந்த ரைமிங்தான். அப்புறம் மாய வித்தை மாமானு ஒரு பாடம் வரும்.. அதையெல்லாம் ரசிச்சுப் படிச்ச காலம் அது.
இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம் இதையெல்லாம் இப்ப நினைச்சு பார்க்கும்போது கண்ணீர் தான் வருது.. மறுபடியும் சின்ன பிள்ளையா மாறி படிக்க முடியலைன்னு .. லீவ் எல்லாம் முடிஞ்சு பள்ளிக்கூடம் திறந்ததும் புது புக் தருவாங்க. அப்போ அந்த புக்குல ஒரு வாசம் வருமே ஹப்பா அப்படி இருக்கும்.. மூணாம் கிளாசுக்கு அப்புறம் தான் நோட்டுல எழுத ஆரம்பிப்போம்.. ஒரு குயர் நோட்டு அரை குயர் நோட்டு, ரெட்டவரி நோட்டு நாலுவரி நோட்டுனு பெரிய லிஸ்ட்டே போட்டு அப்பாகிட்ட கொடுப்போம்... அப்பா வாங்கிட்டு வந்ததும் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணி பாத்துட்டு அதுக்கு காக்கி அட்ட போட்டு வச்சி அழகு பாப்போம்... அப்புறம் அதுக்கு பொம்ம படம் லேபிள் வாங்கலாமா இல்ல பூக்கள் படம் லேபிள் வாங்கலாமானு தேடி வாங்கி ஓட்டுவோம்.. அதுமட்டுமா நட்ராஜ் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கினாலே அது பெரிய விஷயமா தெரியும்.. நட்ராஜ் பென்சில் ரப்பர் .. அதுலயும் பென்சில்ல பின்னாடி ரப்பர் வச்சு வாங்குனாவே அது பெரிய விஷயம்.. கெளரவமே அந்த ரப்பர்லதான் என்பது போல ஒரு கெத்து வரும்.
அப்புறம் ஸ்கேலையே மர ஸ்கேல் , இரும்பு ஸ்கேலு, கண்ணாடி ஸ்கேல்னு டிசைன் டிசைனா வந்துச்சு. அதுலயும் மர ஸ்கேல் வெச்சிருந்தா பெரிய ஆளுன்னு கெத்து காட்டுவோம்.. அப்புறம் அந்த ஸ்கேலால தான் வாத்தியார் கிட்ட அடியும் வாங்குவோம்.. நம்ம கிட்டேயே ஸ்கேலை கடன் வாங்கி நம்மளையே அடிச்ச வாத்தியாருங்களாலதான் நாம இன்னிக்கு நல்லாவும் இருக்கோம்.. இப்ப இருக்கிற மாதிரி ஜிப் வச்ச ஸ்கூல் பேக்லாம் என்னன்னே தெரியாது .. அப்போலோம் ஸ்கூலுக்கு கொண்டு போக ஒன்னு ஒயர் கூடை .. இல்ல மஞ்ச பையில தான் புக் எல்லாம் வச்சு கொண்டு போவோம்.. அதுவும் புக்கு நோட்டு எல்லாம் சேர்ந்தா ரொம்ப வெயிட்டா இருக்கும். அதை தலை மேல தொங்க விட்டுட்டு தலையை குனிஞ்ச மாதிரி போவோம்.. இல்லாட்டி தோள் மேல சுமந்துட்டு போகும்போது நல்லா தான் இருந்துச்சு.. அதுவும் ஸ்கூல் விட்டு வரும்போது திடீர்னு மழை பெஞ்சுருச்சுன்னா புக் எல்லாமே நனைஞ்சு போயிடும். அப்புறம் வீட்டுக்கு வந்து ஒவ்வொரு புக்கா எடுத்து காய வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்.
காலையிலே அம்மா ஸ்கூலுக்கு அழகா ரெட்டை ஜடை பின்னி வீட்ல பூத்த பூவை தலையில வச்சு விடுவாங்க.. இப்போ ஸ்கூல் பொண்ணுங்க வைக்கிற மல்லிப்பூ பிச்சி பூ மட்டும் இல்ல, என்ன பூ கிடைச்சாலும் வைப்போம் முக்கியமா சாமந்திப்பூ, டிசம்பர் பூ, செவ்வந்திப்பூ, கனகாம்பரம் பூ எல்லா பூக்களுமே வச்சு அழகு பார்த்த தலைமுறை நாங்க தான் அப்படின்னு 80ஸ், 90ஸ் கிட்ஸ் ரொம்பப் பெருமையை சொல்வதைப் பார்க்கலாம். அது மட்டுமா ஸ்கூல்ல குரூப் போட்டோ எடுக்கும்போது அழகா ரெட்ட ஜடை பின்னி ரெண்டு பக்கமும் பூ வச்சு போட்டோ எடுக்க கிளம்புவோம்.. அப்போ ஒரு போட்டோ பத்து ரூபா தான் அத வாங்குறதுக்கு கூட அவ்வளவு கஷ்டமா இருக்கும். அந்த போட்டோவையெல்லாம் பார்க்கும்போது அந்த காலத்துக்கே போய் வந்த மாதிரி ஒரு ஃபீலிங் கிடைக்கும்... இப்போ இருபதாயிரம் ரூபாய் செல்லுல எடுத்த செல்பி கூட அந்த ஃபீலிங் கொடுக்கல.
ஸ்கூல்ல சிறு சேமிப்பு அட்டை போட்டு தருவாங்க.. வீட்ல அம்மா குடுக்குற இருபத்து ஐந்து பைசா ஐம்பது பைசானு கொடுக்கிறத கொண்டு போயி ஸ்கூல்ல சார் கிட்ட கொடுத்தா அந்த அட்டையில் இருக்கிற கட்டத்தில் எழுதுவாங்க. அத பார்க்கும்போது ஒரு சந்தோசம் வரும் பாருங்க. நம்மள நினைச்சே நமக்கே பெருமையா இருக்கும்.. அப்போ கிடைச்ச சந்தோசம் இன்னைக்கு பேங்க்ல அக்கவுண்ட்ல ஆயிரக்கணக்குல கொண்டு போடும்போது கூட வரல..
அது மட்டுமா பாதி நாள் மரத்தடியில் உட்கார்ந்து தான் பாடம் படிப்போம். இயற்கையான காற்றோட நண்பர்கள் அனைவரும் வரிசையாக உட்கார்ந்து பாடம் படிக்கும் போது கிடைத்த சந்தோசம் வேறு எதிலுமே கிடைக்காது... அதுலயும் பக்கத்துல இருக்க பிரென்ட் மேல கல்லை தூக்கி எரிஞ்சு விளையாடுறதில்ல அவ்வளவு சந்தோஷம்... மண்ணை அள்ளி மடியில போடுறது.. எறும்பை பிடிச்சு விளையாடுறது.. அதைப் பார்த்த வாத்தியார் அங்க இருந்த டஸ்டரை தூக்கி நம்ம் மேல தூக்கி அடிக்கிறது.. படிப்பு பாதி அரட்டை பாதி விளையாட்டுப் பாதி சேட்டை மீதின்னு வாழ்ந்த வாழ்க்கைங்க அது.. இப்போ அந்த சந்தோஷம் எங்க போச்சுன்னு தெரியல.
அப்போ எல்லாருமே பள்ளியில தான் சத்துணவு சாப்பிடுவோம் , ஏதாவது கல்யாண வீடு, கோவில் கொடை அந்த மாதிரி வரும்போது மதியம் வீட்ல போய் சாப்பிட்டு வருவோம்.. இப்ப இருக்கிற குழந்தைகள் யாருமே மதிய சாப்பாடு வீட்ல போய் சாப்பிட்டு இருக்க மாட்டாங்க.. ஆனா நாங்க மதியம் வீட்ல போய் சாப்பிட்டு கொஞ்ச நேரம் விளையாடிட்டு அப்புறமா ஸ்கூலுக்கு வருவோம்... அப்ப எல்லாம் கொஞ்ச நேரம் கழிச்சு ஸ்கூலுக்கு போகலாம்னு தோணும். இப்போ ஒரு வாட்டியாவது அந்த ஸ்கூல போய் கால் வைக்க மாட்டமான்னு மனசு ஏங்குது...
கிளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தாலே அது ஒரு தனி கெத்து தான்... எல்லா பொறுப்புமே நம்ம கிட்ட வந்த மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும்.. டீச்சர் வரதுக்கு கொஞ்சம் லேட் ஆச்சுன்னா நான் வர வரைக்கும் யாராவது பேசினாங்கன்னா போர்டுல பேர் எழுதி போடுனு சொல்லுவாங்க நம்மளும் நமக்கு பெரிய பொறுப்பு கிடைச்சிருக்குன்னு பிரண்ட் னு கூட பாக்காம போர்டுல பெயர் எழுதி போடுவோம். கொஞ்சம் அதிகமா பேசினா ஓவர், அதைவிட அதிகமா பேசினா வெரி ஓவர்.. பெயர் எழுதி போட்டதால ரெண்டு நாள் ஃப்ரெண்ட் பேசாம மூஞ்சிய தூக்கிட்டு போவா.. அப்புறம் அப்படியே சமாதானம் ஆகிருவோம். அந்த சுகமான நாட்களெல்லாம் இன்னைக்கு நினைக்கும்போது கண்ணுல இருந்து கண்ணீர் தான் வருது... வாரத்துக்கு ஒரு நாள் ஸ்கூல்ல டெஸ்ட் வச்சி நோட்டு திருத்தும் போது நம்ம நோட்டு வர்றதுக்கு முன்னாடி எப்படியாவது பெல் அடிச்சிடனும் அப்படின்னு நிறைய நாள் ஏங்கி இருக்கோம்.. அதேபோல வெள்ளிக்கிழமை வீட்டுப்பாடம் எழுதிட்டு வர சொல்லி இருப்பாங்க சனி, ஞாயிறு என்று ரெண்டு நாள் நல்லா விளையாடிட்டு திங்கள் கிழமை வரும்போது வீட்டுப்பாடம் எழுத மறந்திருப்போம். அன்னைக்கும் இப்படித்தான், சார் கேக்குறதுக்கு முன்னாடி பெல் அடிச்சிரணும்னு வேண்டாத தெய்வமே கிடையாது... இப்போ அப்படி யாராவது எழுத சொல்ல மாட்டாங்களா அப்படின்னு ஆசையா இருக்கு.
ஸ்கூல்ல பிரேயர் நடக்கும் போது எல்லாரும் கண்ண மூடிட்டு இருப்பாங்க நம்ம மட்டும் எல்லாரும் என்ன பன்றாங்க, எப்போ பிரேயர் முடியும்னு அடிக்கடி கண்ண தொறந்து பாத்துட்டு இருப்போம்...அப்புறம் புது புக்கா இருந்தா யாராவது எடுத்துருவாங்கனு புக் மேல எல்லா பேப்பரையும் சேத்தாப்பல பேர் எழுதி வைப்போம், அப்போதான யாரும் எடுக்க மாட்டாங்க... அப்படியெல்லாம் பயங்கர புத்திசாலிப் புள்ளைகளாக இருந்த காலம்ய்யா அது!
ஸ்கூல் படிக்கும்போது எப்படா இந்த ஸ்கூல் லைப் முடியும்னு நினைச்சோம்.. இப்பதான் புரியுது அந்த லைஃப் தான் நம்ம வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளையும் சந்தோசங்களையும் தந்ததுனு... இன்னும் குழந்தைகளாகவே இருந்திருக்கலாமுனு ஏங்க வச்சுருது அந்த நினைவுகள்.. இன்னும் எவ்வளவோ பசுமையான நினைவுகள் மனசுல இருக்குது... இன்னைக்கும் பழைய நண்பர்கள் யாரையாவது பார்க்கும்போது இல்லை படிச்ச ஸ்கூல கடந்து போகும்போது அந்த பசுமையான நினைவுகள் எப்பவுமே மனசுல வந்து அசை போடுது... ஸ்கூலை நினைக்கும்போதே.. மீண்டும் பள்ளிக்கு போகலாம் நம்மை நாம் அங்கே தேடலாம் சிலேட்டு குச்சி கடன் வாங்கலாம்.. இந்த பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது... !
பிளஸ்டூ முடித்த பிள்ளைகளே.. உங்களுக்கும் இப்படிப்பட்ட மறக்க முடியாத நினைவுகள் இருக்கும்.. இந்தப் பள்ளிக்கூடம்தான் உங்களோட எதிர்காலத்துக்கு நீங்களே உங்களுக்காக போட்டுக் கொண்ட அஸ்திவாரம்.. தொடர்ந்து உயர்ந்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.. இந்த மலரும் நினைவுகளை மனதுக்குள் இறுக்கிப் பிடித்தபடி!